சமுத்திரகனி அப்பாவாக எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் அப்பாவாக நடிக்கும் படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் காலம் கடந்தும் நிற்கும் படமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில் அப்பாவாக அவர் நடித்திருக்கும் மிக முக்கியமான படமாக தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியிருக்கும் படம் “ராமம் ராகவம்”. தெலுங்கு நடிகர் தன்ராஜ் கதையின் நாயகனாக நடிப்பதோடு எழுதி இயக்கி இருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்..
படத்தின் கதைப்படி, சார்பதிவாளர் அலுவலகத்தில் மிக நேர்மையான அதிகாரியாக, லஞ்சம் எதற்கும் வளைந்து கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் சமுத்திரகனி. அவருக்கு ஒரே மகன் தன்ராஜ், சரியாக படிக்காமல், எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக, குடித்து விட்டு சுற்றுகிறார். அவரை எப்படியாவது நல்வழிக்கு கொண்டு வந்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பிஸினஸ் செய்வதாக சொல்லி அப்பாவிடம் வாங்கிச் செல்லும் 5 லட்சத்தை ஐந்தே நிமிடத்தில் பெட்டிங்கில் இழந்து விடுகிறார். பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்த்து விட்டால் அங்கும் தில்லும் முல்லு செய்து 10 லட்சம் கடனாளியாக மாறுகிறார். தன்ராஜின் இந்த நடவடிக்கைகள் அவரின் நண்பர்களுக்கே பிடிக்காமல் போகிறது. அப்பா சமுத்திரகனிக்கு தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை எப்படி அமைத்துக் கொடுப்பது என்ற சிந்தனை. இப்படியான சூழலில் மகனை நல்வழிக்கு கொண்டு வந்தாரா? மகன் அப்பாவின் பாசத்தை புரிந்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
சமுத்திரகனி தான் கதையின் நாயகன் என்றே சொல்லலாம். எத்தனையோ அப்பா படங்கள் நடித்திருந்தாலும் இந்த படத்திலும் புதிதாகவே தெரிகிறார். தசரத ராமன் என்ற அந்த கதாபாத்திரத்தில் மகன் எதிர்காலம் மீதும், வாழ்க்கை பற்றியும் நினைத்து வாழும் ஒரு அப்பாவாக, பாசமான அப்பாவாக, நேர்மையான அரசு அதிகாரியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் எல்லாம் நம்மை கலங்க வைக்கிறார்.
தன்ராஜ். உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் வெற்றியே அந்த கதாபாத்திரத்தில் மீது நமக்கு எழும் கோபமும், எரிச்சலும் தான். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். சில காட்சிகளில் நம்மை அடுத்தடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். அம்மாவாக பிரமோதினி. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பாசப்போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் அம்மா கதாபாத்திரத்தில் மனதில் பதிகிறார். நாயகியாக மோக்ஷா. பெரிதாக வேலையில்லை. கதாபாத்திரமும் பெரிதாக எழுதப்படவில்லை. வெறுமனே வந்து போகிறார். தன்ராஜ் மீது அன்பு வைத்திருக்கும் ஒரு அண்ணனாக, லாரி ட்ரைவராக ஹரீஷ் உத்தமன் நல்ல ஒரு நடிப்பை தந்துள்ளார். சுனில் ஒரு கேமியோ போன்ற கதாபாத்திரத்தில் வந்து மனதில் நிற்கும் நடிப்பை தந்துள்ளார். சத்யா, ஸ்ரீனிவாச ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
அருண் சிலுவேறு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கிளைமாக்ஸூக்கு முன்பு வரும் முருகன் மந்திரம் எழுதிய பாடல் கதைக்கு தேவையானதை சிறப்பாகவே செய்துள்ளது. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. துர்கா கொல்லி பிரசாத் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஒரு சில லொகேஷன்களை மிகச்சிறப்பாக காட்டி கண்களுக்கு விருந்து வைக்கிறார்.
தன்ராஜ் எழுதி இயக்கியிருக்கும் இந்த அப்பா மகன் படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல ஒரு படம். வழக்கமான ஒரு கதைக்கு நல்ல ஒரு திரைக்கதை எழுதி, எமோஷனல் விஷயங்களை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார். ஒரு சில கதாபாத்திரங்கள் வெறுமனே எழுதப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சில கதாபாத்திரங்களின் Arc மிக நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் மிக முக்கியமான விஷயம் ஒன்றை மாற்றி மாற்றி கொஞ்சம் இழுத்திருப்பது போன்ற உணர்வு எழாமல் இல்லை. ஆனாலும் படம் முடியும்போது நம் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி செல்கிறது இந்த “ராமம் ராகவம்”.