லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். டைட்டில் வெளியீட்டி டீசர் வீடியோ மூலம் படத்தின் டைட்டிலை அறிவித்தனர். படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் கூலி என ஒரே டைட்டில் பயன்படுத்தப்பட உள்ளதால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்தியில் ஏற்கனவே அமிதாப்பும், தமிழில் சரத்குமாரும் இந்த கூலி என்ற தலைப்பில் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், லியோ படங்களை போலவே தனியாக ஒரு டைட்டில் அறிமுக வீடியோவை மிக நேர்த்தியாக நல்ல தரத்துடன் உருவாக்கி இருந்தார் லோகேஷ். முந்தைய இரண்டு படங்களில் இல்லாத அம்சமான அதிரடி ஆக்ஷனை அள்ளித் தெளித்திருந்தார் லோகேஷ். ரஜினி என்ட்ரியே அதிரடி ஆக்ஷன் உடன் தான்.
லோகேஷ் தன் முந்தைய படங்களில் தான் ரெட்ரோ எனப்படும் பழைய பாடல்கள், ரீமிக்ஸ், டயலாக்குகளை உபயோகித்தார். இங்கு இந்த டீசர் வீடியோவிலேயே ரஜினிக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக ரஜினியின் ‘ரங்கா’ திரைப்படத்தின் வசனமான “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன, எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே, சோறு உண்டு சுகமுண்டு மது உண்டு மாது உண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு” என்ற வசனத்தை ரஜினியை பேச வைத்திருந்தார் லோகேஷ்.
அத்துடன் ரஜினியின் தங்க மகன் படத்தில் ஒடம் பெற்ற பிரபலமான பாடலான வா வா பக்கம் வா பாடலின் ஒரு பகுதியை ரீமிக்ஸ் செய்து தெறிக்க விட்டிருந்தார் அனிருத். அன்பறிவு வடிவைத்த ஆக்ஷன் பிளாக்கும், சதீஷ்குமார் வடிவமைத்திருந்த செட்டும் பிரமாதம். வீடியோ முழுக்க பிளாக் அண்ட் ஒயிட்டிலும், தங்கம் மஞ்சள் நிறம், ரத்தம் சிவப்பு நிறம் என கிரிஷ் கங்காதரன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மே மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது. 2024 ஏப்ரல் 14-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.