என் வாழ்வில் கண்ட ஒரு மனிதரின் உண்மைக் கதை தான் ராஜா கிளி!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘ராஜா கிளி’. இயக்குனர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் மற்றும் இசையமைக்க, அவரது மகன் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். தம்பி ராமையா உடன் சமுத்திரக்கனி, ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி மற்றும்  பலர் நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இயக்குனர் மூர்த்தி பேசும்போது, “இந்த படத்தை 2கே கிட்ஸ்-இன் ரத்தக் கண்ணீர் என்று சொல்லலாம். இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ் சினிமாவில் புதிய ஒரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மலையாளத்தில் நடிகர் சீனிவாசன் போல தமிழ் சினிமாவில் தம்பி ராமையா. சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் போல உமாபதி ராமையாவும் அந்த இடத்திற்கு நிச்சயம் வருவார். சமுத்திரக்கனி ஒரு நடமாடும் டிரான்ஸ்பார்மர். எப்போது எல்லாம் நமக்கு சார்ஜ் குறைகிறதோ அவரிடம் சென்று ஒரு மணி நேரம் பேசி விட்டு வந்தால் எனர்ஜி கூடி விடும்” என்றார்.

சாட்டை துரைமுருகன் பேசும்போது, “சமூக நோக்கம் இல்லாதவர்கள் படைப்பாளிகளாக இருக்க முடியாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஏதோ ஒரு வடிவத்தில் மக்களுக்கு கடத்த வேண்டும். அப்படிப்பட்டவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நான் ஒரு காலத்தில் பல வழக்குகளை சந்தித்து ஜாமீன் கிடைக்காமல் திண்டாடினேன். அதனால் இந்த படத்தில் நீயே நீதிபதியாக நடி என்று நடிக்க வைத்து விட்டார். எனக்கு அடையாளம் சாட்டை. அந்த பெயர் கிடைக்க முக்கிய காரணமே சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் தான். அவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற சாட்டை படம் பார்த்த பிறகு தான் என் யூட்யூப் சேனலுக்கு சாட்டை என்ற பெயரை வைத்தேன்” என்றார்.

ராஜாகிளி மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள உமாபதி ராமையா பேசும்போது, “நான் இந்த படத்தின் இயக்குனர் ஆனதே ஒரு விபத்து தான். சுரேஷ் காமாட்சி சார் பொறுத்தவரை திறமையானவர்களை மிகச்சரியாக கண்டுபிடிப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் தான், சுரேஷ் காமாட்சி என்னை அழைத்து தன்னம்பிக்கை அளித்து இயக்குனராக்கினார். கதை அப்பா எழுதியது, ஆனாலும் திரைக்கதையில் அப்பாவும், சுரேஷ் காமாட்சியும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது வித்தியாசமான ஒரு பிணைப்பு. அப்பா அவரை தம்பி என அழைப்பார். நான் அவரை அண்ணா என அழைப்பேன். கிளைமாக்ஸில் ஒரு எமோஷனல் காட்சியை படமாக்கிய போது மீண்டும் ஒரு டேக் எடுக்க அண்ணனை கேட்கலாமா என தயங்கினேன். ஆனால் அவரே அதை புரிந்து கொண்டு அந்த காட்சியை அற்புதமாக நடித்து கொடுத்தார். அப்பா தான் ஹீரோ என்பதால் புதுசா ஏதாவது செய்யணும்னு சின்ன முள்ளு பாடலில் ஒஸ்தியில் சிம்பு ஆடிய நடன அசைவுகளை கொடுத்து எடுத்திருக்கிறோம். நல்ல படத்தை கொடுத்து இருக்கிறோம், நம்பி வந்து பாருங்கள்” என்றார்.

கதையின் நாயகன் தம்பி ராமையா பேசும்போது, “எனது மகன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த நிகழ்வில் சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. நான் சந்தித்த பல தொழிலதிபர்களிடம் உரையாடிய போது அவர்களில் மனிதரில் புனிதராக இருக்கக்கூடிய ஒரு தூய ஆத்மா அவர் வாழ்வின் ஒட்டுமொத்த ரகசியத்தையும் ஒரு பச்சை குழந்தை போல என்னிடம் கொட்டி தீர்த்தார். அதை திரைமொழி ஆக்கியிருக்கிறோம். சினிமாவில் பல பேர் என்னை பயன்படுத்தினர், என்னுடன் பயணம் செய்தனர். ஆனால் சமுத்திரக்கனி மட்டும்தான் என்னை பயன்படுத்தி பயணம் செய்து எப்போதும் பக்கத்திலும் இருப்பவர். நான் ஒரு குணச்சித்திர நடிகர், ஆனால் வினோதய சித்தம் என்கிற படத்தை எனக்காகவே உருவாக்கி, என்னை கொண்டாட வைத்தவர். வினோதய சித்தம் உருவாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ராஜாகிளியை என்னால் உருவாக்கியிருக்க முடியாது. நானே நடித்துக் கொண்டு இயக்குநராக இருப்பது சரி வருமா என நினைத்து உமாபதியை இந்த படத்தை இயக்கும்படி அழைத்தேன். அவர் தயங்க, உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத்து நீ தான் படத்தை இயக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி அவரை இயக்குநராக்கி இருக்கிறார். இந்த ராஜா கிளி ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. விரைவில் வெளியே வந்து பறக்க இருக்கிறது” என்றார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேசும்போது, “இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் எனக்கு இது ஸ்பெஷல் தான். என் சம்பந்தி ஹீரோ, மாப்பிள்ளை இயக்குனர். இதுவரை நான் கூட நடிக்திடாத அளவுக்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா சார் நடித்திருக்கிறார். நானும் மாப்பிள்ளை உமாபதியும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. அடுத்தடுத்து நிறைய மேடைகளில் எங்களை பார்க்கப் போகிறீர்கள். சுரேஷ் காமாட்சி நல்ல திறமையாளர்களை தேர்வு செய்து வாய்ப்பு கொடுப்பவர் என்று சொல்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “தம்பி உமாபதி சுய ஒழுக்கம் உள்ள ஒரு இளைஞர். தம்பி ராமையா அண்ணனிடம் நீங்கள் நடிக்கிறீங்க, பாட்டு எழுதுறீங்க, இசை அமைக்கிறீங்க, அதனால் உமாபதி இந்த படத்தை இயக்கட்டும் என சொன்ன, அதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார். அவரிடம் இன்னும் அதிக படைப்புத்திறமை ஒளிந்திருக்கிறது. இயக்குனர் மணிவண்ணன், ராம் ஆகியோருக்கு அடுத்து நான் அதிகம் வியந்தது தம்பி ராமையாவை பார்த்து தான். கையில் ஸ்கிரிப்டே இல்லாமல் ஸ்பாட்டில் வேலை செய்யக் கூடியவர்.

மாநாடு சமயத்தில் எனக்கு ஃபோன் செய்து வாழ்த்தியது இரண்டே நடிகர்கள் தான். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி. மிஸ்கின், சமுத்திரக்கனி இருவருமே உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. சமீபத்தில் என்னை கவர்ந்தது இவர்கள் இருவர் தான். தம்பி ராமையா தான் கதாநாயகன் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சுபா இருவருக்கும் நன்றி. ஒரு படம் நல்ல படமா இல்லையா என்பதை அதன் வெற்றி மட்டும் தான் தீர்மானிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மானிக்காது. இந்த படத்தை நவம்பர் 29ஆம் தேதி வெளியிடலாம் என்று தான் முடிவு எடுத்திருந்தோம். ஆனால் புஷ்பா 2 ரிலீஸ் காரணமாக இப்போது டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இயக்குனர் சமுத்திரக்கனி பேசும்போது, “யாருக்கு எதை தரணும் எந்த சூழ்நிலையில் கொடுக்கணும் என்பதை காலம் தான் முடிவு செய்யும். கடந்த ஒரு வாரமாக பயணங்களில் இருக்கும் போது ஃபிளைட் தாமதமாகவே இருந்தது. ஆனால் இன்று சரியான நேரத்திற்கு ஃபிளைட் கிளம்பி விட்டது, எல்லாமே காலம் முடிவு செய்வது தான். இதை நான் மிகவும் நம்புகிறேன். ஒரு இயக்குனரின் மூன்று படங்களை பார்த்தால் போதும். அந்த இயக்குனரின் கேரக்டர் என்னவென்று தெரிந்து விடும் என சொல்வார்கள். அது தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். சுரேஷ் காமாட்சியின் படங்களே சொல்லும் அவர் யார் என்று. இந்த சினிமா இருக்கும் வரை அவரது வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும். நான் எந்த ஒரு கதை எழுதினாலும் தம்பி ராமையாவை வைத்து தான் எழுதுவேன், இப்போது கூட அவரை வைத்து தான் ஒரு கதை எழுதி முடித்து இருக்கிறேன். தம்பி ராமையா அண்ணனிடம் அரசியல், சினிமா, இலக்கியம் என எந்த டாபிக் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவரை ஒரு நூலகமாகத்தான் நான் பார்க்கிறேன். உமாபதியுடன் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். அவருக்கு நடிப்பு, நடனம், ஃபைட் என எல்லா தகுதியுமே இருக்கிறது. ஆனால் ஒரு சரியான கதவு திறக்கவில்லையே என்று நான் நினைத்தேன். முதல் கதவு அர்ஜுன் சார் மூலமாக திறந்திருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *