இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்உருவாகி இருக்கும் வெப் சீரீஸ் ‘சட்னி சாம்பார்’. ஜூலை 26-ஆம் தேதி இன்று முதல் ஹாட் ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. காமெடி நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் சீரீஸில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அதுவே இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் உருவாகியுள்ள மனதை வருடும் உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு உடன் வாணி போஜன், ‘கயல்’ சந்திரன், நிதின் சத்யா, சார்லி, இளங்கோ குமரவேல், மைனா நந்தினி, தீபா, நிழல்கள் ரவி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஊட்டியில் அமுதா கஃபே என்ற ஒரு பெயரில் ஒரு ஹோட்டலை நடத்துகிறார் நிழல்கள் ரவி. அந்த ஹோட்டலின் சாம்பார் மிகவும் பிரபலம். அவரின் மகன் கயல் சந்திரன், மகள் மைனா நந்தினி, மருமகன் நிதின் சத்யா. ஒரு நாள் நிழல்கள் ரவி திடீரென நிலை குலைய படுத்த படுக்கையாகிறார். தன் நிறைவேறாத ஆசை ஒன்றை சொல்லி தன் மகனை நிறைவேற்ற சொல்கிறார். திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்ததாகவும், அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவனை தேடி அழைத்து வர சொல்கிறார். அவரை தேடி சென்னைக்கு செல்ல, அவரும் அமுதா உணவகம் என்ற பெயரில் ஒரு கையேந்தி பவன் நடத்துவது தெரிகிறது. அவரை ஊட்டிக்கு அழைத்துப் போய் அப்பா முன் நிறுத்த அவர் உயிர் பிரிகிறது. இறக்கும் முன் அவனையும் நம் குடும்பத்தில் ஒருவனாக நினைக்க வேண்டும் என சத்தியம் வாங்கி விடுகிறார் நிழல்கள் ரவி. அதன் பின் என்ன ஆனது? குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.
‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார், மிகவும் யதார்த்தமாக சிறப்பாகவே வசனத்தை எழுதியுள்ளார். இயக்குனர் ராதமோகனை ஓடிடி தளங்களில் பார்ப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். குடும்பம், உறவுகள், உணர்வுகளை ஒட்டி மென்மையான கதைகளை குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் கொடுக்கும் ராதாமோகன் இந்த தொடரையும் சிறப்பாகவே கொடுத்துள்ளார். குடும்பத்துடன் தாராளமாக அமர்ந்து ரசிக்கலாம்.