தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் கவுண்டமணி. அவரின் காமெடி அன்றும் இன்றும் என்றும் எவர்கிரீன். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார். கடைசியாக 49ஓ என்ற அரசியல் பகடி படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் நடித்திருக்கும் படம் “ஒத்த ஓட்டு முத்தையா”. இன்னுமொரு அரசியல் சடையர் ஜானரில் உருவான படம். கவுண்டமணியின் பழைய ஃபார்ம் தொடர்ந்ததா? அவரின் அல்டிமேட் கவுண்டர்களை மீண்டும் பார்க்க முடிந்ததா? என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக இருக்கும் முத்தையா பெரும் செல்வாக்கு படைத்தவர். ஒரு தேர்தலில் ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைகிறார். அதையும் மீறி அவருக்கு கட்சியிலும் செல்வாக்கு. பொது வெளியிலும் செல்வாக்கு. அவருக்கு மூன்று தங்கைகள். அவர்களை ஒரே குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பிகளுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை மனதில் வைத்து, அண்ணன் தம்பி இருப்பவர்களை சந்திக்க, அவர்களை காதலிக்க துவங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இவர்கள் எதிர்பார்த்ததை போல சகோதரர்கள் இல்லை. இதனால் காதலையும் கைவிட முடியாமல், அண்ணன் பேச்சையும் மீற முடியாமல் தவிக்கும் தங்கைகள் இவர்களை எப்படி திருமணம் வரை கொண்டு சென்றனர்? ஒத்த ஓட்டு முத்தையா மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எல்லா சவால்களை எதிர்த்து, எம்.எல்.ஏ ஆனாரா? என்பதே மீதிக்கதை.
இந்திய சினிமாவில் 85 வயதிலும் காமெடி நடிகராக, ஹீரோவாக நடித்து சாதனை படைத்திருக்கிறார் கவுண்டமணி. இந்த படத்திலும் வழக்கம் போல கவுண்டர் அடித்து கலகலவாக்குகிறார். இருப்பினும் முந்தைய எனர்ஜி இல்லாததால் முன்பு போல அவரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை. முழுப்படமும் கவுண்டமணி நடிக்க முடியாது என்பதாலேயே மற்ற கதாபாத்திரங்களின் மீதும் கதை பயணிக்கிறது. யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருவரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மணன், வையாபுரி, சந்தான பாரதி, சிங்கமுத்து, ரவி மரியா, OAK சுந்தர், சென்றாயன், கூல் சுரேஷ் மற்றும் மூன்று இளம் ஜோடிகள் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளரும் கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடிந்தவரை தரமாகவே கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் சாய் ராஜகோபால் ஒரு அரசியல் சடையர் படத்தை கொடுக்க எடுத்து முயற்சியும், அதற்கு கவுண்டமணி போன்ற ஒரு லெஜண்டை தேர்வு செய்த விதமும் பாராட்டுக்குரியது. ஆனால் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே ரசிகர்களுக்கு தெரியாத வண்ணம் பல நேரங்களில் இஷ்டத்துக்கு காட்சிகள் வந்து போகும் உணர்வு எழுகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய அரசியல்வாதிகளை பகடி செய்யும் விதமாக பெயர்களையும், தமிழக அரசியலில் நடந்த சம்பவங்களையும் காட்சிகளாகவும், வசனங்களாகவும் வைத்திருக்கிறார். ஓரளவு ரசிக்கும்படி இருந்தாலும் முழுமையாக ரசிக்க முடியாத வண்ணம் இருக்கிறது. கவுண்டமணி ரசிகர்கள் அவரை திரையில் காணும் அனுபவத்துக்காக சென்று ரசிக்கலாம்.