தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 50க்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகர்கள் அறிமுகம் ஆகிறார்கள். அதில் ஒருவரோ அல்லது இருவரோ தான் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றிகரமான நாயகர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் ருத்ரா. இவர் நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர். விஷ்ணு விஷால் ஆரம்ப காலங்களில் தன் கடின உழைப்பால் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தது போல ருத்ராவும் நல்ல இடத்தை பிடிப்பாரா? பார்க்கலாம்.
ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா என்று எல்லோராலும் அறியப்படும் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கும் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் ருத்ரா. தன் சகோதரருக்காக விஷ்ணு விஷாலும் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார். லிட்டில் திங்ஸ் என்ற இந்தி வெப் தொடர் மூலம் இளைஞர்களை கவர்ந்த மிதிலா பால்கர் நாயகியாக நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சினிமாவில் இயக்குனர் ஆகும் லட்சியத்துடன் சுற்றும் நாயகன் ருத்ராவுக்கு சினிமா ஹீரோ விஷ்ணு விஷால் இடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ருத்ரா ஆரம்பத்தில் சொல்லும் கதை பிடிக்காமல் போக, ஒரு காதல் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். ஒரு இளைஞனின் பள்ளி, கல்லூரி, அதன் பின் என அவன் வாழ்வில் சந்தித்த காதல்களைப் பற்றி சொல்கிறார். அந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்து போகிறது. ஆனால் அந்த கதையே என் வாழ்வில் நடந்த கதை என்கிறார் ருத்ரா. அந்த நாயகியுடன் இனிமேல் என்னால் சேரவே முடியாது என்கிறார். அதைக் கேட்ட விஷ்ணு அவளை சந்தித்து விட்டு வா, மீதிக்கதையை எழுதி விட்டு வா, அப்போது தான் இந்த படம் நடக்கும் என சொல்கிறார். அதன் பின் என்ன ஆனது? ருத்ராவின் இயக்குனர் கனவு நனவானதா? பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களஆ? என்பதே மீதிக்கதை.
நடிகர்களை பொறுத்தவரை ஏற்கனவே நடிப்பு அனுபவம் கொண்ட நாயகி மிதிலா பால்கர் தன் அழகாலும், நடிப்பாலும் படத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதைப்படி நாயகனை விட வயதில் மூத்தவர் என்று சொல்லப்படுகிறது, அதற்கேற்ற வகையிலேயே கதாபாத்திரமாகவும் கொஞ்சம் முதிர்ச்சியை தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் ருத்ரா, முதல் படம். ஆனாலும் பெரிதாக குறை எதுவும் இல்லை. தன்னால் முடிந்த நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். பள்ளி, கல்லூரி, சினிமா உதவி இயக்குனர் என காலங்கள் மாறுவதற்கேற்ப தன் தோற்றத்தையும், நடிப்பையும் தந்துள்ளார். முதல் படத்திலேயே இந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். எமோஷனல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் முயன்றால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.
சினிமா ஹீரோவாகவே, நடிகர் விஷ்ணு விஷாலாகவே நடித்துள்ளார் விஷ்ணு. தன் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை போன்ற விஷயங்களையும் திரையில் அப்படியே ஓபனாக பேசியிருக்கிறார். ஹார்ட் டிஸ்க் கலாயை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது. அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். இயக்குனராகவே வரும் மிஷ்கின் ஒரு சில காட்சிகள் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். ருத்ராவின் சித்தப்பாவாக வரும் கருணாகரன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். அஞ்சு குரியன் நடிகையாகவே வருகிறார், பெரிதாக வசனங்கள் இல்லை என்பதாலே மனதில் பதியவில்லை. பிக் பாஸ் நிவாஷினி, கீதா கைலாசம், விஜய் சாரதி, நிர்மல் பிள்ளை, கஸ்தூரி, வைபவி தாண்டெல் என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
ஜென் மார்ட்டின் இசை துள்ளல், பாடல்கள் படத்துடன் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறது.
விஷ்ணு விஷால், மிஷ்கின், கருணாகரன், ரெடின் கிங்க்ஸ்லீ என ஒரு சில பேர் மட்டுமே பரிச்சயமான முகங்கள். மற்றபடி முழுக்க புதுமுகங்களை மட்டுமே வைத்து இளமை துள்ளலான ஒரு காதல் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார். புதுமுகங்கள் தான் என்றாலும் சலிப்பு ஏற்படாமல் ரசிக்கும்படி பல காட்சிகள் அமைத்திருந்ததும், இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான விஷயங்களை வைத்திருந்ததும் படத்துக்கு பலம்.
காதல் கதையை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாகவும் அதே சமயம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இன்றைய தலைமுறையின் காதலையும் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். காதலர் தினத்துக்கு வர வேண்டிய படம் சற்று தாமதமாக சாதாரண நாளில் வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு காதல் படம் தான் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’!.