நிறம் மாறும் உலகில் – விமர்சனம்!

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில். சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க, பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார். ட்ரைலரில் ஒரு முழு சினிமாவாக தெரிந்தாலும் இது நான்கு கதைகளையும், அதை இணைக்கும் ஒரு கதையையும் சொல்லும் ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ளது படம் பார்க்கும்போது தெரிகிறது. அம்மா என்ற ஒற்றைப் புள்ளியில் அனைத்து கதைகளும் சொல்லப்படுகிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, விஜி சந்திரசேகரின் ஒரே மகள் லவ்லின் சந்திரசேகர். கடந்த பிறந்த நாளில் அவருடன் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பால் ஒரு வருடம் பேசாமலே இருக்கிறார். திடீரென இந்த பிறந்த நாள் அன்று அவரது அம்மாவை பார்க்கவே பிடிக்கவில்லை என சொல்லி வீட்டை விட்டு கிளம்பி தோழி வீட்டுக்கு செல்கிறார். ரெயிலில் டிடிஆர் யோகி பாபுவை சந்திக்க அவர் இந்த விஷயங்களை கேள்விப்பட்டு அம்மாவை இப்படி உதாசீனப்படுத்துறியே என சொல்லி தான் கேட்ட சில பயணிகளின் கதைகளை அவருக்கு சொல்கிறார். எல்லாமே அம்மாவின் மகத்துவத்தை சொல்பவை.

பசியின் கொடுமையை பற்றி சொல்லும் பாரதிராஜா, வடிவுக்கரசி எபிசோடு, சிறுவயதிலேயே அம்மாவை பறிகொடுத்து அம்மாவின் அன்புக்கு ஏங்கும் நட்டியின் எபிசோடு, அப்பா இல்லாத சூழலிலும் பல கொடுமைகளுக்கு நடுவே தன்னை வளர்த்த அம்மாவை காப்பாற்ற முடியாமல் இயலாமையில் தவிக்கும் ரியோ ராஹ் எபிசோடு, தனிமையில் வாழும் தனக்கு கிடைத்த அம்மாவுக்காக வாழும் சாண்டி எபிசோடு என ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் எல்லாவற்றிலுமே நம்மை கண் கலங்க வைக்கும் விஷயங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் எமோஷனலாக கனெக்ட் ஆகி விடும் கதைகள். இவை அனைத்தையும் மிக அழகாக, அதே சமயம் நேர்த்தியாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ. மும்பை, துவரங்குறிச்சி கிராமம், காமேஷ்வரம், சென்னை ஹவுஸிங் போர்டு என நான்கு பகுதிகளில் நான்கு கதைகளும் நடக்கிறது.

ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான அளவு கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார் இயக்குனர். அவர்களும் கொஞ்சம் நேரமே வந்தாலும் தங்கள் பங்கை , தங்கள் இருப்பை காட்டுகிறார்கள். நட்டி, பாரதிராஜா, மைம் கோபி, சாண்டி என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர்களாகட்டும், துணை கதாபாத்திரங்களில் நடித்த சுரேஷ் மேனன், கனிகா, ஆடுகளம் நரேன், காவ்யா அறிவுமணி, ரிஷிகாந்த், வடிவுக்கரசி, மைம் கோபி, விக்னேஷ் காந்த், ஆதிரா, துளசி என எல்லோருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். எல்லா கதைகளுமே விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வின் யதார்த்தத்தை சுடும் அளவுக்கு சொல்லியிருக்கிறது. தனிமை, முதுமை போன்ற கசப்பான உண்மைகளையும் முகத்தில் அறைந்தாற்போல சொல்லி விட்டுப் போகிறது.

மல்லிகாஅர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவில் ஐந்து களங்களுமே சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளன். அந்தந்த ஊர்களின் தன்மை, நேட்டிவிட்டியையும் நன்றாகவே காட்டியிருக்கிறார்கள். தேவ் பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி இசை படத்துக்கு ஜீவனாக அமைந்துள்ளது. கமெர்சியல் அம்சத்துக்காக சேர்க்கப்பட்ட அந்த சாண்டி எபிசோட் பாடலும் ரசிக்கும்படி உள்ளது.

மொத்தத்தில் 4 விதமான வாழ்க்கை, 4 கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளி என வாழ்க்கை அனுபவம் இல்லாத ஒருவரும், வாழ்க்கை அனுபவங்களை எடுத்து சொல்லும் ஒருவரும் என இரண்டு பேர் பேசுவது வழியாக கதை விரியும்படி அமைக்கப்பட்டுள்ள இந்த திரைக்கதை நல்ல முயற்சி.

வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் படமாக இது மனதில் நிற்கிறது. இதெல்லாம் ஒரு பிரச்சினைனு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா நான் வாழ்றது ஒரு நல்ல வாழ்க்கை என லவ்லின் உணரும்  புள்ளி இந்த சமூகத்தின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. நல்ல முயற்சி, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *