மாரீசன் – விமர்சனம்!

‘மாமன்னன்’ படத்தில் அதிகம் பேசப்பட்ட வடிவேலு – ஃபகத் ஃபாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் “மாரீசன்”. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 98-வது படம். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுத சுதீஷ் ஷங்கர் இயக்கியிருக்கிறார். ஒரு பயணத்தில் சந்திக்க நேரும் இருவருக்கு இடையேயான சம்பவங்களும், சம்பாஷனைகளும் அது எதை நோக்கி செல்கிறது என்பதை சொல்லும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடும் ஃபகத் ஃபாசில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வருகிறார். வந்த உடனே கையில் கிடைத்தவற்றை சுருட்டும் நோக்கில் சில திருட்டுகளில் ஈடுபடுகிறார். அந்த ஒரு நேரத்தில் தான் வடிவேலுவை சந்திக்கிறார். வடிவேலு ஒரு அல்ஸைமர் நோயாளி, எந்த விஷயமும் தனக்கு நினைவில் இருக்காது என்கிறார். அவர் வங்கிக் கணக்கில் 25 லட்சம் பணம் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஃபகத் எப்படியாவது அந்த பணத்தை சுருட்டி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவேலுவை பின் தொடர்கிறார். பின் வடிவேலு சொல்லும் இடங்களுக்கு அவரும் போக, ஃபகத் அழைக்கும் இடங்களுக்கு இவர் போக என அந்த பயணம் சில நாட்களுக்கு நீள்கிறது. அந்த பயணத்தில் இருவருக்கும் இடையிலும் சில மனமாற்றங்கள் நிகழ்கிறது. வடிவேலு யார்? அவரின் உண்மையான நோக்கம் தான் என்ன? ஃபகத் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடினாரா? என்பதே மீதிக்கதை.

வடிவேலு மீண்டும் மாமன்னன் மோடுக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறார். ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு மாறி, காமெடியன் வடிவேலுவை நம் கண்ணில் இருந்து வெற்றிகரமாக மறைத்து விடுகிறார். அதுவே இந்த படத்தின் முதல் வெற்றி. வயிற்றுக்கு மேலே ஏற்றி போட்ட பேண்ட், சட்டை என இந்த படத்தில் ஒரு புது தோற்றத்தில் அசத்துகிறார். சில எமோஷன் காட்சிகளில் நம்மை கண் கலங்கவும் வைக்கிறார்.

தொண்டிமுதலும் திருக்ஷாக்ஷயமும், வேட்டையன் படங்களில் பார்த்தது போன்ற ஒரு ஃபகத் பாசில். இந்த படத்திலும் ஒரு துருதுரு திருடன் கதாபாத்திரத்தில் நம்மை ரசிக்க வைக்கிறார். எப்படியாவது பணத்தை சுருட்டி விட வேண்டும் என அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் கலகல. மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நல்ல ஒரு ஆழமான நடிப்பை தந்துள்ளார். வடிவேலுவின் மனைவியாக வரும் சித்தாரா, ஃபகத் அம்மாவாக வரும் ரேணுகா, போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளா, சரவண சுப்பையா, லிவிங்க்ஸ்டன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அந்தந்த ஊர்களுக்கு நாமே பயணித்து விட்டு வந்த உணர்வை தருகிறது. கழுகுப்பார்வையில் பார்க்கும்போது அத்தனையும் அவ்வளவு அழகு. அதோடு இரண்டாம் பாதியில் படம் திரில்லர் பாணிக்கு மாறும்போது அதை அழகாக காட்சிகளில் காட்டியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் படத்துடன் கேட்கும்போது நம்மை ஒன்ற வைக்கிறது. பின்னணி இசையிலும் முதல் பாதிக்கு ஏற்றவாறும், இரண்டாம் பாதியில் அதன் மாற்றத்துக்கு ஏற்றவாறும் நல்ல ஒரு பின்னணி இசையை வழங்கியுள்ளார்.

வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனமும், அதை சுதீஷ் சங்கர் படமாக்கிய விதமும் சிறப்பு. ஆரம்பத்தில் மெல்ல நகரும் கதை ஒரு கட்டத்தில் திசை மாறும்போது சுவாரஸ்யம் அதிகமாகிறது. சாதாரண திருட்டை மையப்படுத்திய கதையாக ஆரம்பித்து வேறு ஒரு தளத்துக்கு செல்லும்போது படத்தின் தன்மையும் மாறுகிறது. அதன் மீதான நம் மதிப்பீடும் மாறுகிறது. வடிவேலுவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் லட்டு கொடுத்து பேசும் ஒரு வசனம் போதும் படத்தை பற்றி சொல்ல. கதை மாந்தர்களின் மனமாற்றமும் கதையோட்டத்தோடு நிகழும்போதும், அவர்களின் உணர்வுகள் பிரதிபலிக்கும் இடமும் நல்ல ஒரு அனுபவத்தை தந்து விட்டுப் போகிறது. ஃபகத் ஃபாசில் வழக்கமாக தன் முத்திரையை பதிப்பது போலவே இதிலும். ஆனாலும் வடிவேலுவும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்து படத்தை அவர் வசமாக்குகிறார். மொத்தத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இந்த “மாரீசன்”. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *