SK ப்ரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குரங்கு பெடல். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய “சைக்கிள்” என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் 80’ஸ் கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தையும், குதூகலத்தையும் செல்லுலாய்டில் கொண்டு வந்திருக்கிறதா? சிறுவர்களின் உலகம் எப்படி இயங்கும், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளாரா இயக்குனர்? என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 80’களின் ஆரம்பத்தில் கதை தொடங்குகிறது. 4 சிறுவர்கள் கோடை விடுமுறையை எப்படி கொண்டாடலாம் என திட்டமிடுவதில் ஆரம்பிக்கிறது. சைக்கிள் டையர் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, ஐஸ் சாப்பிடுவது, விளையாட்டு என எல்லா விதமுமாக விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தாலும் சைக்கிள் ஓட்ட முடியவில்லையே என்ற ஏக்கம். அதற்காக வாடகை சைக்கிள் எடுத்து சைக்கிள் பழக முயற்சிகள் எடுக்கிறார்கள். இதற்கிடையில் மாரியப்பன் என்ற சிறுவனின் அப்பா கந்தசாமியை நடராஜா சர்வீஸ் என்ற பட்டைப்பெயரால் அழைப்பது அவனுக்கு மேலும் எரிச்சலூட்டுகிறது. அப்படி ஒரு நாள் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டும்போது சைக்கிளை கடையில் விட தாமதமாக, பயத்தில் எக்ஸ்ட்ரா காசு தேடி அவன் அலைய, அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
சாய் கணேஷ், ரதீஷ், ராகவன், ஞானசேகர் என கதையில் வந்த சிறுவர்கள் அனைவருமே மிகவும் எதார்த்தமான நடிப்பை, நடிப்பு என்பதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். சிறுவர்கள் போடும் சண்டை, அவர்களின் அப்பாவித்தனம், நான் பெரிய ஆளுடா என பீத்திக் கொள்ளும் இன்னொசன்ஸ் என படத்தொ நிறைய கியூட் மொமெண்ட்ஸ் ஏராளம்.
சிறுவனின் அப்பாவாக காளி வெங்கட், மிகச் சிறப்பாக, அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். எங்கு போனாலும் நடந்தே செல்லும் ஒரு அப்பாவாக, லாட்டரி சீட்டில் ஏதாவது ஜாக்பாட் அடிச்சிடாதா என்ற ஒரு நப்பாசையில் காசை கரியாக்குவது என அப்பாவி அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். மிலிட்டரி சைக்கிள் கடையின் ஓனராக வரும் நக்கலைட்ஸ் பிரசன்னா ரசிக்க வைக்கிறார். பிரசன்னா, ஜென்சன் திவாகர் வரும் காமெடி காட்சிகள் ரகளை. அவர்கள் காமெடி படத்துக்கு நல்ல பக்க பலம். அம்மா, அக்காவாக நடித்தவர்களும் யதார்த்தமான முகங்கள். வாத்தியாராக வரும் நக்கலைட்ஸ் செல்லாவும் ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம். கிராமங்களின் தூய்மையை அழகாக படம் பிடித்துள்ளார். கோடை விடுமுறையை உணர வைத்துள்ளார். அத்துடன் ஆறு, ஓடை, மலை என இயற்கையை சிறப்பாக காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் படத்தை நம் மனத்துக்குள் கடத்துகிறது. ஆண்டனி ரூபன் ஒலிப்பதிவில் மயில் அகவும் ஒலி கூட கச்சிதம்.
ராசி அழகப்பன் எழுதிய சிறுகதை இந்த காலகட்டத்துக்கும் பொருந்தும் என்பதை துல்லியமாக கணித்துள்ளார் கமலக்கண்ணன். வித்தியாசமான கதைக்களங்களை கையாளும் கமலக்கண்ணன் இந்த படத்தை கையில் எடுத்திருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. குழந்தைகளின் உலகை மிகச்சிறப்பாக திரையில் வடித்துள்ளார். நம்மையும் நம் பழைய நினைவுகளுக்கு கடத்துகிறார். 80,90களின் நாம் அனுபவித்த அனைத்து விஷயங்களையும் திரையில் காட்டி நமக்கு நோஸ்டால்ஜியா உணர்வை தந்திருக்கிறார்.
குழந்தைகளுக்கென திரைப்படங்கள் எதுவும் வருவதே இல்லை என்ற ஒரு ஏக்கத்தை இந்த படம் போக்கியிருக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் கட்டாயம் போய் பார்க்க வேண்டும். இந்த படத்தை ஒரு நல்ல நோக்கத்துடன் ரிலீஸ் செய்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கூடுதல் பாராட்டுக்கள்.