டாடா, பிளடி பெக்கர் படங்களுக்கு பின் கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கிஸ். நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம். ரொமாண்டிக் ஃபேண்டஸி படமான இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ட்ரைலரே கவனம் ஈர்த்த நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் கவினுக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். ஒரு நாள் ஒரு புத்தகம் கவினிடம் வந்து சேர்கிறது. அது கைக்கு வந்த பிறகு காதலர்கள் முத்தம் கொடுப்பதை கவின் பார்த்தாலே அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு முன் கூட்டியே தெரிகிறது. அந்த அதீத சக்தியை வைத்து கவின் காதலர்களை பிரித்து விடுகிறார். ஒரு கட்டத்தில் கவினும், பிரீத்தியும் காதலிக்க துவங்குகிறார்கள். காதலை சொல்ல கவினுக்கு ப்ரீத்தி முத்தம் கொடுக்க, ப்ரீத்தியின் எதிர்காலம் கவினுக்கு தெரிய, அதில் பிரீத்தி இறந்து போவது போல கவினுக்கு தெரிகிறது. அதன் பின் அவரை விட்டு விலகுகிறார் கவின்? விலகியவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? நாயகிக்கு என்ன ஆனது? அந்த புத்தகத்திற்கும் கவினுக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கவின், டாடா, பிளடி பெக்கர், கிஸ் என ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களில், வேறு வேறு பரிமாணத்தில் மிக இயல்பான நடிப்பை தந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். கவின், பிரீத்தி ஜோடி ரொம்பவே ஃப்ரெஷ். பார்ப்பதற்கும் நல்ல அழகான ஜோடி. நாயகி பிரீத்தி அயோத்திக்கும் இதற்கும் முற்றிலும் வேறு வேறு துருவங்கள். கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக, இளசுகளை கட்டி இழுக்கும் அழகுடன் படம் முழுக்க இமைக்காமல் பார்க்க வைக்கிறார். நடனத்திலும் ஜொலிக்கிறார்.
நாயகனின் நண்பன் மிர்ச்சி விஜய், அவரது தந்தை விடிவி கணேஷ் ஜோடி அடிக்கும் ரகளை தியேட்டரை கலகலப்பாக்குகிறது. சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் தன் பங்கை சிறப்பாகவே செய்து விட்டுப் போகிறார் பிரபு. தேவயானி, கௌசல்யா, ராவ் ரமேஷ் ஆகியோரின் எமோஷனல் எபிசோடும் படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையுமே படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு கண்களுக்கு கலர்ஃபுல் விருந்தாகவும், படத்தை இளமை துள்ளலாக வைத்திருக்கிறது.
நடன மாஸ்டராக இருந்த சதீஷ் இயக்குனர் ஆகியிருக்கிறார், எப்படி இருக்குமோ என எண்ணிக் கொண்டிருந்தபோது தன்னாலும் நல்ல பொழுதுபோக்கு படத்தை தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். நல்ல ஒரு கான்செப்ட்டை பிடித்த இயக்குனர் அதை காமெடி கலந்த ஃபீல்குட் திரைப்படமாக சொல்லியிருப்பதிலேயே ஜெயித்திருக்கிறார். கல கலப்பான முதல் பாதியும், கொஞ்சம் எமோஷனல் ஃபீல்குட் இரண்டாம் பாதியும் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் காதலர்களுக்கு கொண்டாட்டமான படமாகவும், சாதாரண ரசிகர்களுக்கு ரசிக்கும் படமாகவும் அமைந்திருக்கிறது இந்த ‘கிஸ்’.

