காந்தாரா சாப்டர் 1 – விமர்சனம்!

2022 ஆம் ஆண்டு எந்த ஒரு ஆரவாரமும், பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணம் ஒரு கன்னட படமாக வெளியான காந்தாரா மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து பல மடங்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி உள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க, எழுதி இயக்கி நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். முந்தைய படம் போலவே அனைவரும் ரசிக்கும் படமாக இருந்ததா? வெற்றி அடையுமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, காந்தாரா படத்தில் நாம் பார்த்த இடத்தின் வரலாற்றை சொல்லும் ஒரு படமாக உருவாகி இருக்கிறது இந்த காந்தாரா சாப்ட்டர் 1. பங்க்ரா அரசன் தன்னுடைய இடத்தில் இருந்து காட்டுக்குள் இருக்கும் ஈஸ்வர தோட்டம் என்ற இடத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அவர் இறந்து விடுகிறார், அவர் மகன் ஜெயராமாலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஜெயராம் அவரது மகன் குல்ஷன் தேவய்யாவுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். ஜெயராம் மகன் அரசனாக அந்த இடத்தை அடைய முயற்சிக்க இறந்து போகிறான். அந்த காட்டில் வாழும் பழங்குடி மக்களின் தலைவனாக இருக்கும் ரிஷப் ஷெட்டி என்ன செய்கிறார். அந்த மன்னர்கள் என்ன ஆனார்கள், அவர்கள் திட்டம் முறியடிக்கப்பட்டதா? அந்த இடத்தின் ரகசியம் என்ன? என்பதே மீதிக்கதை.

ரிஷப் ஷெட்டியின் கடும் உழைப்பு திரையில் ஒரு நடிகராகவும், திரைக்குப் பின் ஒரு இயக்குனராகவும் மிக மிக அபாரம். தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இந்த படத்துக்கு தந்துள்ளார். அது ஒவ்வொரு ஃபிரேமிலும் நமக்கு தெரிகிறது. முதல் பாதி சண்டைக் காட்சிகளில் பாகுபலி போல சாகசங்கள் மேலோங்கி இருக்கிறது. இரண்டாம் பாதியில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் எல்லாம் அவரது நடிப்பு உண்மையிலேயே அபாரம்.

நாயகி ருக்மிணி வசந்த். திரையில் செய்யும் ஆளுமையாலும், அவரது அழகாலும் நம்மை கவர்ந்து இழுக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கூட அதகளம் செய்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற நாயகியாக பொருத்தமாக அமைந்திருக்கிறார். ஜெயராமுக்கு மிக மிக முக்கிய கதாபாத்திரம். மிக ஆழமான, அழுத்தமான கதாபாத்திரம். அதை தன் தோளில் தாங்குகிறார். அவரது மகனாக குல்ஷன் தேவய்யா, ஒரு சோம்பேறி அரசனாக ஆரம்ப காட்சிகளில் தோன்றுகிறார். ஆனாலும் அரக்கத்தனமான வில்லன் கதாபத்திரத்தில் மிரட்டுகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களும் தங்கள் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

அர்விந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு அட்டகாசம். உண்மையாக அந்த காட்டுக்குள் பயணித்த உணர்வை தந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை படம் பிடித்த விதமும் சிறப்பு. அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையில் நம்மையும் அந்த காந்தார உலகத்துக்குள் அழைத்து சென்றதோடு அந்த தெய்வீக உணர்வையும் நமக்கு தருகிறார். வராஹ ரூபம் உள்ளிட்ட பாடல்களை படத்தில் பயன்படுத்திய விதமும் சிறப்பு. படம் முழுக்க ஏகப்பட்ட VFX காட்சிகள், ஆனால் எது VFX, எது உண்மை என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவு மிக சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ரிஷப் ஷெட்டி ஒரு இயக்குனராஹ இந்த படத்தின் மூலம் டாப் லீக்குக்கு சென்று விட்டார். ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கும் பிரமாண்டம், குலிகா தொடர்பான காட்சிகள், போர் காட்சிகள், கிளைமேக்ஸ் காட்சிகள் என நிறைய அட்டகாசமான தருணங்களை தந்திருக்கிறார். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பார்க்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. சராசரியான முதல் பாதியும், அதிரடியான இரண்டாம் பாதியும் கலந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக மாறியிருக்கிறது இந்த காந்தாரா சாப்டர் 1. படம் முடியும்போது காந்தாரா சாப்டர் 2 இருக்கிறது என்ற அறிவிப்போடு முடித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *