தமிழ் சினிமாவில் மிகவும் அப்பழுக்கற்ற, மண்ணையும், இயற்கையையும் நேசித்து வாழும் மலைவாழ் மக்கள், பூர்வகுடி மக்களின் வாழ்வியலையும் பேசும் படங்கள் வெகு சிலவே வந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியீடு தான் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னி. அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், செபாஸ்டியன் சதீஷ் இசையமைத்திருக்கிறார். சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
படத்தின் கதைப்படி, ஆரம்பத்தில் பதின்ம வயது சிறுமி மற்றும் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு புல்லேலு என்ற மலைக்கிராமத்தை நோக்கி நடந்து செல்கிறார் நாயகி அஸ்வினி சந்திரசேகர். அங்கு வசிக்கும் தாத்தா வீட்டிற்கு போய் தங்குகிறார்கள். அவருடன் இருப்பது அவரின் அண்ணன் குழந்தைகள் என்றும், அவர் விருந்தினராக வரவில்லை, அவரை தேடி ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருப்பது போகப்போக தெரிய வருகிறது. அஸ்வினியை கொலை செய்து அவரிடம் இருக்கும் ஒரு பொருளை எடுத்துப் போக துடிக்கிறார்கள். கொலை வெறியுடன் சுற்றுகிறார்கள். அந்த கும்பல் பின்னணி என்ன? என்ன பொருளை தேடி வந்தார்கள்? அஸ்வினி அவர்களிடம் இருந்து குழந்தைகளையும், அந்த பொருளையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகி அஸ்வினி சந்திரசேகர். முழுக் கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். மலை கிராமத்தில் வெறும் காலுடன் செருப்பு கூட இல்லாமல் தான் ஒரு கிராமப் பெண் என்று நம்பும்படியான ஒரு உழைப்பு. குழந்தைகளை காக்கும் ஒரு தாயாக, பாரம்பரியத்தை காக்கும் ஒரு கடவுளாக என ஸ்கோர் செய்கிறார். கிராமப் பெண்களின் அன்யோன்யம் எப்படி இருக்கும் என்பதையும் இரண்டாம் பாதியில் காட்டுகிறார். ஒரு கும்பலையே ஓட ஓட விரட்டிக் கொல்லும்போதும் மிரட்டுகிறார்.
படத்தில் நாயகியை தவிர பெரும்பாலும் பரிச்சயம் இல்லாத முகங்கள். பல பேரை அந்த கிராமத்தில் இருந்தே தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களின் எளிய முகம், மண் மனம் மாறா சொல்லாடல் என திரையில் கவனிக்க முடிகிறது. நாயகியின் அண்ணனாக வரும் மணிமாறன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து எமோஷனலாகவும் ஸ்கோர் செய்கிறார். தாரா க்ரிஷ், ராம் பரதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் மலை கிராமங்களின் தூய்மையான காற்றையும் நம்மால் உணர முடிகிறது. அந்த மலைகிராமத்தை எங்கு பிடித்தார்களோ என்று நினைக்க வைக்கிறது. திரையில் பார்க்க மிக அருமையான இடமாக இருக்கிறது. செபாஸ்டியன் சதீஷ் இசையில் பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் அந்த இசை தனுஷின் கர்ணன் இசையை ஞாபகப்படுத்தும் அளவுக்கு ஒரு பூரிப்பான உணர்வை தருகிறது.
இயற்கை வைத்தியம் தான் கதையின் மையக்கரு. சாகக் கிடக்கும் ஒரு மருத்துவரே இயற்கை வைத்தியத்தால் உயிர் பிழைத்து அதன் மகத்துவத்தை நினைத்து மெய் சிலிர்க்கிறார். அதனை தெரிந்து கொண்ட கார்பரேட் அதை வைத்து காசாக்க நினைக்கிறது. மேலோட்டமான கதையாக பார்த்தால் பழசாகவே இருக்கிறது. ஆனால் ட்ரீட்மெண்டில் ஒரு உணர்வுப் பூர்வமான கதையாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் அது தெரியும்போது அந்த குறை நீங்குகிறது. சின்ன பட்ஜெட்டில் ஒரு நல்ல கதையை சொல்ல நினைத்த இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடிக்கு வாழ்த்துக்கள்.
Thankyou so much sir your amazing Review