கள்வன் – திரை விமர்சனம்

இசையமைப்பாளர், ஹீரோ என இரட்டை குதிரை சவாரி செய்யும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரெபெல் என்ற படம் வெளியாகி, பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த வாரம் டியர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கள்வன்.

ஜிவி பிரகாஷ்குமார் உடன் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இவானா, தீனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக இருந்த பிவி ஷங்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

படத்தின் கதை:
சத்தியமங்கலம் மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ், அவர் நண்பர் தீனா இருவரும் சின்ன சின்னத் திருட்டுகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். ஒரு நாள் திருடப் போன வீட்டில் நாயகி இவானாவை பார்க்க, காதலில் விழுகிறார். இவானா முதியோர் இல்லம் ஒன்றில் இருக்கும் தாத்தா பாரதிராஜாவிடம் கருணையோடு இருக்கிறார். அதை கவனிக்கும் ஹீரோ அந்த தாத்தாவை தத்தெடுக்கிறார். தன் மீதுள்ள காதலுக்காக அவரை தத்தெடுப்பதாக இவானா நினைக்க, ஹீரோவின் திட்டம் வேறொன்றாக இருக்கிறது. அது என்ன? ஜிவி பிரகாஷ் காதலை இவானா ஏற்றாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

ஜிவி பிரகாஷ் வழக்கம் போல தன்னால் முடிந்தவரை நடித்திருக்கிறார். கல கல காட்சிகள் ஆகட்டும், எமோஷனல் காட்சிகளாகட்டும் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். தீனாவுடன் லூட்டி, இவானாவுடன் காதல், பாரதிராஜா உடனான காட்சிகள் என ஸ்கோர் செய்கிறார்.

அப்பாவி தாத்தாவாக இருக்கும் பாரதிராஜா புலியிடம் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி சிறப்பு. ஆனால், அந்த கதாபாத்திர வடிவமைப்பும், பின் கதையும் அழுத்தமாக இல்லாததால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அந்த கதாபாத்திரத்துக்கு அனுபவ நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார், பாரதிராஜா.

நாயகி இவானா அழகு, ஜிவியின் சுயரூபம் தெரியும் போது சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் இவானா. நண்பராக வரும் தீனா ஓரளவு நன்றாகவே நடித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘கட்டழகு கருவாச்சி’ பாடல் கேட்கும் ரகம். ரேவாவின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

மலை சார்ந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தாலும் ‘விஷூவல் ட்ரீட்டை வைத்து ஓபி அடிக்காமல் கதைக்கு தேவையானதை மட்டுமே செய்துள்ளார் இயக்குனர். அழகான ஒன்லைனை பிடித்த இயக்குநர் அதை திரைக்கதையாக்கும் போது சறுக்கி விட்டார் என்றே சொல்லணும். சுவாரஸ்யமான காட்சிகள் அடுத்தடுத்து இல்லாதது படத்தன் குறை. திருடனைக் காதலிக்கும் நாயகிகள் தமிழ் சினிமாவில் இன்னமும் தொடர்வது ஆச்சரியம். திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் நல்ல படமாகவே அமைந்திருக்கும் இந்த கள்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *