தமிழ் சினிமாவில் Taboo என்று சொல்லப்படுகிற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. திருநங்கைகளை பற்றிய படங்கள் கூட ஒரு சில வெளியாகி இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படங்கள் இல்லாவிட்டாலும் படத்திற்குள் ஏதாவது ஒரு இடத்தில் புகுத்தப்பட்டிருக்கும். ஒரு சில உண்மையான, நல்ல நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும். சில அவற்றை மோசமாக சித்தரித்தும் காட்டப்பட்டது உண்டு.
அப்படி LGBTQ என்ற சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் பற்றியும், அவர்களின் மன ஓட்டம், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கிறதா? அவர்களை ஆதரிப்பவர்களை எப்படி பார்க்கிறது என்பது போன்ற பல விஷயங்களை பேசும் ஒரு படமாக வெளியாகியுள்ளது “காதல் என்பது பொதுவுடைமை”. அதை ஒரு ஆபாசமாக, வக்கிரமாக பார்க்காமல், இயல்பான, நல்ல உணர்வுப்பூர்வமான ஒரு படமாக தரும் முயற்சி தான் இந்த படம்.
படத்தின் கதைப்படி, நாயகி லிஜோமோல் ஜோஸ் அவரின் அம்மா ரோகிணியிடம் தான் காதலிப்பதாக சொல்கிறார். யூடியூபில் தினமும் காதலை பற்றி எல்லாம் வீடியோவில் பேசும் ரோகிணி, நீ காதலிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. யாராக இருந்தாலும் எனக்கு சம்மதம் என்று சொல்வதோடு, காதலனை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்கிறார். அதன்படி லிஜோ மோல் ஜோஸ் தான் காதலிக்கும் நபரை வீட்டுக்கு அழைத்து வர, அவள் காதலிப்பது ஒரு பெண் என்ற விஷயம் தெரிய வர, ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அவரை விட்டு பிரிந்து வேறு ஒரு மனைவியுடன் வாழும் அவரது கணவர் வினீத்தை வீட்டுக்கு அழைத்து விஷயத்தை சொல்கிறார். அவர் அந்த விஷயத்தை எப்படி கையாண்டார்? லிஜோ மோல் மற்றும் காதலி அனுஷா காதலில் உறுதியாக நின்றார்களா? அவர்கள் தரப்பு நியாயத்தை எப்படி எடுத்து வைத்தார்கள்? என்பதே மீதிக்கதை.
நாயகி லிஜோமோல் ஜோஸ். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் மிகச் சரியாக பொருந்திப் போகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் படங்களில் எல்லாம் எப்படி அந்த கதாபாத்திரமாகவே தெரிந்தாரோ எப்படியே இந்த படத்திலும் அப்படி மிகச்சிறந்த ஒரு நடிப்பு. இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது காதலியாக வரும் அனுஷா, நல்ல ஒரு நடிப்பு. இருவரும் காதலை வெளிப்படுத்தும் விதம், அதற்காக போராடும் விதம் என கன கச்சிதமான தேர்வு. நல்ல ஒரு யதார்த்தமான நடிப்பு.
நாயகியின் அம்மாவாக ரோகிணி. சமூகத்தின் எவ்வளவு தான் முற்போக்காக தங்களை காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இருக்கும் பழமைவாதமும், குணநலன்களும் வெளிப்படும் ஒரு கதாபாத்திரம். மிகச்சிறந்த நடிப்பு. நாயகியின் அப்பாவாக வினித். தன் மகள் மனதை கரைத்து தன் வழிக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஒரு அப்பா, சராசரி பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார்.
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக தீபா, என்ன தான் சாதாரண ஏழை பெண்ணாக இருந்தாலும் இப்படியான சிக்கலானதாக கருதப்படும் லிஜோவின் காதலை புரிந்து கொள்ளும் விதமும், அதை ஏற்றுக் கொள்ளும் அவரது துய மனதும் படத்தின் ஜீவன். லிஜோமோல் ஜோஸை காதலித்து பிறகு அவரின் பாலின ஈர்ப்பை தெரிந்து புரிந்து கொண்டு நல்ல ஒரு நண்பனாக பயணிக்கும் கலேஷ் மனதில் நிற்கிறார். வினித் உடன் அவரின் உரையாடல் ரசிக்க வைக்கிறது.
கண்ணன் நாராயணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு ஆதார ஜீவனாக இருக்கிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவும் படத்திக்கு பலம்.
ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை சார்ந்த வக்கிரம் அல்ல, அது இயல்பான ஆண் பெண் காதல் போல, மனிதர்களின் உணர்ச்சி தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். ஓரின சேர்க்கையாளர்கள் மீது சமூகத்துக்கு இருக்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் ஒரு விவாதமாகவே செய்திருக்கிறார் இயக்குனர்.
வினீத், தீபா ஆகியோர் படம் பார்க்கும் ஆடியன்ஸ் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்க, கலேஷ், லிஜோ ஓரின சேர்க்கையாளர்களின் தரப்பு நியாயங்களை சொல்ல, ஒரு நல்ல சுவாரஸ்யமான, அதே சமயம் ஆரோக்கியமான விவாதத்தை முன் வைக்கிறது படம். இந்த விஷயத்தை ஒரு சினிமாவாக, ரசிகர்கள் ரசிக்கக் கூடிய ஒரு படமாக கொடுத்து நல்ல ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கும் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்.