மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக ‘மட்டி’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வெற்றியை பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜாக்கி’. மதுரையை களமாகக் கொண்டு அங்கு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து இந்த ஜாக்கி படம் உருவாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் பாரம்பரியமான கெடா சண்டையில் வெற்றி பெற்று ஜாக்கி பதக்கம் என்ற பெருமையை பல ஆண்டுகளாக பெற்று வைத்திருக்கிறார் ரிதான் கிருஷ்ணாஸ். அந்த கர்வத்துடன் சுற்றி வரும் அவர் யுவான் கிருஷ்ணாவின் கெடாவுடன் தன் கெடாவை மோத வைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த மோதலில் ரிதான் தோற்கிறார். தோற்பது மட்டுமல்லாமல் ரிதானின் கெடாவின் கொம்பு உடைந்து விடுகிறது. அதை அவமானமாக கருதும் அவர் எப்படியாவது தான் இழந்த அந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என முயல்கிறார். இந்த ஈகோ அவரை எந்த அளவுக்கு கொண்டு செல்கிறது? யுவான் இந்த மோதலை எப்படி எதிர்கொள்கிறார்? இவர்களின் மோதல் என்ன ஆனது? கெடா சண்டை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகன் யுவான் கிருஷ்ணா. ஒழுங்காக வாராத தலைமுடி, தாடி, லுங்கி கட்டிக் கொண்டு ஷேர் ஆட்டோ ஓட்டும்போது அந்த ஊர் இளைஞராகவே நம் மனதில் பதிகிறார். தன் கெடா காளியுடன் ஒரு சகோதரன் போல பழகும் காட்சிகளிலும் சரி, அம்மு அபிராமியுடன் காதல் காட்சிகளிலும் சரி ஸ்கோர் செய்கிறார். வில்லனாக ரிதான் கிருஷ்ணாஸ். ஒரு ஹீரோவுக்கேற்ற தோற்றத்தில் ஸ்டைலான வில்லனாக அசத்துகிறார். கெடா சண்டையை பெருமையாக கருதி, அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவரின் கதாபாத்திரம் தனித்து தெரிகிறது. நாயகனாகவும் நடிக்கலாம்.
நாயகியாக அம்மு அபிராமி. வறண்ட கதைக்களத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக அழகாக வந்து நம்மை ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நாயகனின் அக்காவாக சரண்யா ரவிச்சந்திரன், கெடா சண்டை நடத்துபவராக மது சூதன ராவ், KPY யோகி, சாய் தினேஷ், மற்ற நடிகர்கள் என எல்லோருமே அவர்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
சக்தி பாலாஜி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காதல் பாடல்கள் இதம். பின்னணி இசையில் கொஞ்சம் டெம்போவை ஏற்றியிருக்கிறார். அனிருத், ஜேக்ஸ் பிஜாய் நினைவுபடுத்தும் விதம் கொஞ்சம் தெறிக்க விடும் இசையை தந்திருக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு படத்துக்கு பல சேர்த்திருக்கிறது. மதுரை யானை மலை உள்ளிட்ட சில பகுதிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு கதையை புரியும் விதத்தில் தந்திருக்கிறது. ஆனாலும் கொஞ்சம் நீளத்தை குறைக்க முயற்சித்திருக்கலாம்.
இயக்குனர் பிரகபல். அவருக்கு இந்த போட்டிகள் மீது அலாதி ஆர்வம் போல. போன படத்தில் மட் ரேஸ், இந்த படத்தில் கெடா சண்டை என அதை சுற்றியே கதைக்களத்தை அமைத்து இயக்குகிறார். ஆனால் ஏதோ எடுத்தோம் என இல்லாமல் அதை முழுமையாக தெரிந்து கொண்டு, அதை நாம் நேரில் பார்க்கும் அனுபவத்தை தர கடுமையாக உழைக்கிறார் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது. கெடா சண்டையில் ஆரம்பித்து கெடா சண்டையில் முடியும் படம் என்றே சொல்லலாம். அதற்கிடையில் காதல், குடும்பம் என மற்ற விஷயங்களையும் காட்டியிருக்கிறார். கெடா சண்டை என்றாலும் அந்த கெடாவையும் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்ப்பதை காட்டிய விதமும் நெகிழ வைக்கிறது. மொத்தத்தில் சேவல் சண்டையை காட்டிய ஆடுகளம் போல மதுரை பின்னணியில் ஒரு கெடா சண்டைக் கதையை கமெர்சியலாக படைத்திருக்கிறார். நிச்சயம் ஒரு முறை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

