சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்ப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இயக்குநர் டி.ராஜவேல் இயக்கியுள்ள ஃபேண்டஸி ஃபீல்குட் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரும் High concept படங்களில் இதுவும் ஒன்று. நம்ம தமிழ் ரசிகர்களை கவருமா? படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சொந்தமாக ஒரு வீடு வாங்கி தன் காதலியை மணந்து அந்த வீட்டில் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைக்கும் தர்ஷன் வேளச்சேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்குகிரார். தர்ஷன் வாங்கிய புதிய வீட்டில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. ஏதாவது அமானுஷ்ய சக்தி இருக்குமோ என பயப்படும் தம்பதி பூஜைகள் செய்ய, அப்படி கெட்ட சக்தி எதுவும் இல்லை என்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்படி அந்த வீட்டில் நடக்கும் மர்மமான விஷயங்களுக்கு காரணம் என்ன? காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பமும் இதில் எந்த வகையில் சம்பந்தப்படுகிறது என்பதே மீதிக்கதை.
தர்ஷன், கனா படத்துக்குப் பிறகு கதாநாயக வேடத்தில் நல்ல ஒரு கதையில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். குறிப்பாக எமோஷன் காட்சிகளில் அவரது நடிப்பு மெறுகேறியிருக்கிறது. காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அர்ஷா பைஜு, தமிழில் நல்ல ஒரு அறிமுகம். அழகாக இருக்கிறார், இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார்.
காளி வெங்கட் சமீப காலங்களில் வரும் பல படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் நம்மை ஆட்கொள்கிறார். இந்த படத்திலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அவரது காமெடி விஷயங்களும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே’ பாடல் வரும்போது தியேட்டரே அதிர்கிறது. வினோதினி வைத்யநாதன் நடிப்பும் படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது. அந்த குட்டிப்பையன் நடிப்பும் சிறப்பு. தீனா, அப்துல் லீ கதாபாத்திரங்களும் படத்துக்கு பெருமளவில் உதவி புரிகிறது. குறிப்பாக scifi விஷயங்களை அப்துல் லீ கதாபாத்திரம் மூலம் எளிமையாக சொல்லியிருக்கிறார்.
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் தன்மைக்கு ஏற்ப நன்றாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் அந்த வீட்டில் நடக்கும் கதையில் எம்.எஸ்.சதீஷின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை உயர்த்துகிறது.
ஒரு சுவாரஸ்யமான scifi விஷயத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜவேல். ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்த அந்த Scifi விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு மிக எளிதாக புரியும் வகையில் சொன்னதிலேயே இயக்குனர் பாதி ஜெயித்து விட்டார். அதை திரைக்கதையில் புகுத்திய விதமும், கதை மாந்தர்களை வைத்தே அதை எளிதாக விளக்கிய விதமும் அருமை. நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்தாலும் ஆரம்பத்தில் வரும் சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் நேரக் குறைப்பு செய்திருக்கலாம். மற்றபடி தமிழ் சினிமாவில் வித்தியாசமான சினிமா அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.