தமிழ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து புதுப்புது தொடர்களை தந்து கொண்டே இருக்கும் ZEE5 தற்போது வழங்கவிருக்கும் புதிய சீரீஸ் ‘ஹார்டிலே பேட்டரி’. ஒரு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான இந்த தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன், பாடினி குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்த தொடரின் முதல் 3 எபிசோடுகளை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. எப்படி இருக்கு? இந்த முதல் பார்வையில் பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, புத்திசாலியான விஞ்ஞான ஆர்வலரான நாயகி பாடினி குமார். காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் ரியாக்ஷன் மட்டுமே, வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறார். தன் தோழிகளுக்கு அவர் தயார் செய்த ஒரு கருவியைக் கொண்டு அவரகளின் காதலர்கள் உண்மையில் ஆத்மார்த்தமாக காதலிக்கிறார்களா? என்பதை புரிய வைக்கிறார். அதே நேரத்தில் காமிக் ரைட்டராக இருக்கும் நாயகன் குரு லக்ஷமணை யதேச்சையாக சந்திக்கிறார். அந்த கருவி சொல்வது பொய் என்று உன்னையே சொல்ல வைக்கிறேன் என பாடினியிடம் சொல்கிறார். இருவரும் நெருக்கமாகவும் பழகுகிறார்கள். இருவரின் பழக்கம் காதலாக மாறியதா? அந்த காதல் பற்றிய experiment என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகன் குரு லக்ஷ்மன் ஒரு don’t care attitude உடன் சுற்றும் ஒரு இளைஞனாக கலகலப்பாக கதையை நகர்த்தும் கதாபாத்திரமாக ஸ்கோர் செய்கிறார். நாயகி பாடினி குமார் சோஃபியா என்ற கதாபாத்திரத்தில் தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலியான, காதலை அறிவியலால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பெண்ணாக நல்ல நடிப்பை தருகிறார். நாயகியின் தோழியாக வரும் சுமித்ரா தேவியும் நல்ல ஒரு அறிமுகம். கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். யோக லக்ஷ்மி, ஜீவா ரவி, ஷர்மிளா என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
கூலி சுந்தர்ராஜன் ஒளிப்பதிவு பட்ஜெட் தெரியாத வண்ணம் கலர்ஃபுல்லாக படத்தை தந்திருக்கிறது. மைக்கேல் ஆகாஷ் இசை காட்சிகளுக்கும், அந்தந்த உணர்வுகளுக்கும் ஏற்ற நல்ல இசையை தந்திருக்கிறது. கலை இயக்குனர் ராஜா அந்த கருவியை வடிவமைத்த விதமும் சிறப்பு. எடிட்டர் நிஜாம் படத்தொக்கும் அதை தாண்டி செய்திருக்கும் அனிமேஷனும், சிஜியும் இந்த தொடருக்கு கூடுதல் பலம்.
இயக்குனர் சதாசிவம் செந்தில்ராஜன் எடுத்துக் கொண்ட கதைக் களத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இந்த தொடரை சுவாரஸ்யமாக வழங்க எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாக சொல்லியிருக்கிறார். காதல் கதையிலும் கொஞ்சம் புதுமையை புகுத்தி இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கியிருக்கிறார். அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன இருக்கும் என்பதை காண நாமும் டிசம்பர் 16 வரை காத்திருப்போம் ரசிகர்களோடு சேர்ந்து. நிச்சயம் இந்த தொடரை பார்க்கலாம்.

