சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்க, சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், PGS புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “காட்ஸ்ஜில்லா”. புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” ஜானரில் உருவாகிறது. இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், அலிஷா மிரானி, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS மற்றும் பலர் நடிக்கின்றனர். மோகன் குரு செல்வா இயக்குகிறார்.
இந்த படம் இன்று திரையுலக பிரமுகர்களின் ஆசியுடனும், வாழ்த்துக்களுடனும் வெகு விமரிசையாக பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர்கள் விஜய், சசி மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மோகன் குரு செல்வா இயக்கத்தில் உருவாகும் இந்த “காட்ஸ்ஜில்லா” படமானது, ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

