நல்ல படங்களை தேடித் தேடி அதை வெளியிட்டு அதற்கு ஒரு வெளிச்சத்தை தரும் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் S.R பிரபு இந்த வாரம் வெளியிட இருக்கும் திரைப்படம் “குட் டே”. பிரித்விராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அரவிந்தன் இயக்கியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் கதையாக சமூக நோக்குடன் உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, திருப்பூரில் தாய் ஃபேப்ரிக்ஸ் என்ற பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைஸராக வேலை செய்கிறார் பிரித்விராஜ் ராமலிங்கம். குடிப்பழக்கம் உடையவரான குடித்து செய்யும் அட்டகாசங்களே முழுக்கதை. போதையில் இருக்கும்போது வீட்டு ஓனர் வாடகை கேட்டு வர அவரை அடித்து மண்டையை உடைக்கிறார், கல்லூரியில் தன்னுடன் படித்த மைனா நந்தினி வீட்டுக்கு கேக்குடன் போய் நிற்க, அங்கு ஒரு பிரச்சினை, காவல் நிலையத்தில் விசாரிக்க கூட்டிப் போக அங்கு இன்ஸ்பெக்டர் சட்டை மற்றும் வாக்கி டாக்கி தூக்கிக் கொண்டு ஓடி மிகப்பெரிய பிரச்சினையை இழுத்து விடுகிறார். தன் மேனேஜர் வீட்டுக்கு சென்று அங்கும் ஒரு பிரச்சினை என அவர் அந்த ஒரு இரவில் குடித்து விட்டு தான் செய்த சேட்டைகளை உணர்ந்தாரா? குடியின் கோர முகத்தை உணர்ந்தாரா? அந்த ஒரு இரவில் அவர் பயணத்தில் சந்தித்த மனிதர்கள் அவர் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகள், மாற்றங்கள் என்ன என்பதே இந்த படத்தின் மீதிக்கதை
கதையின் நாயகனாக பிரித்விராஜ் ராமலிங்கம். நடிகராக அறிமுகம் ஆகும்போதே இப்படி ஒரு நடிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ஒரு கதையில் நடித்திருக்கிறார். எந்த ஒரு குறையும் இல்லாத யதார்த்தமான நடிப்பு. குடித்து விட்டு அலப்பறை செய்யும் காட்சிகளில் ரகளை, அதே நேரம் தன் நிலையை உணரும் காட்சிகளில் வலியை பிரதிபலிக்கிறார். நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் ஒரு நல்ல நடிகராக பரிணமிக்க வாழ்த்துக்கள்.
அந்த ஒரு இரவில் நாயகன் பயணிக்கும் வழியில் அவர் சந்திக்கும் கதாபாத்திரங்கள் மற்ற நடிகர்கள், அதனாலேயே பலரும் ஏதோ கேமியோ செய்த உணர்வு எழுகிறது. காளி வெங்கட் ஒரு ஆட்டோ டிரைவராக, அவருடனே குடித்து விட்டு அட்டகாசம் செய்யும் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். மைனா நந்தினி சில காட்சிகள் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அவரின் கணவராக முருகதாஸ், டென்ஷனில் அவர் புலம்பும் காட்சிகளும் ரகளை. பக்ஸ் ஒயின் ஷாப்பில் அம்மா மிக்ஸியை கையில் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இப்படிப்பட்ட மனிதர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோமே என்ற உணர்வு எழுகிறது. போஸ் வெங்கட் ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறது அவர் முகம். கதையை எழுத தூண்டியவரான கார்த்திக் நேத்தா ஒரு காட்சியில் வந்து அதகளம் செய்து விட்டு போகிறார்.
இன்ஸ்பெக்டராக விஜய் முருகன் முதல் காட்சியிலேயே மிரட்டுகிறார். பின் கடைசி காட்சியில் அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன் தான் படத்தில் சொல்ல வந்த விஷயமே. பெண் போலீஸாக ஜீவா சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் கேரியரில் முக்கியமான படம் இது. கதையின் போக்கையே மாற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி. அவர் மனைவி பற்றி அவர் பேசும் வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல இருந்தது. குடிக்கு அடிமையானவர்கள் நிச்சயம் இந்த காட்சியை பார்த்தால் போதும். இதை மட்டும் தனியாக யூடியூபில் வெளியிட்டாலே இந்த படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கம் ஓரளவு நிறைவேறும்.
மதன் குணதேவ் ஒளிப்பதிவில் ஆரம்பத்தில் பகலில் வரும் காட்சிகள் ஒரு உலக சினிமா பார்ப்பதை போன்ற உணர்வை கொடுத்தது. படம் முழுக்க இரவில் படமாக்கப்பட்டிருந்தாலும் அதை மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் மனதை வருடுகிறது. பின்னணி இசை பல காட்சிகளில் நம்மை கதைக்குள் கொண்டு சென்று விடுகிறது. ஒரு வித உணர்வை நம் ஆழ்மனதில் எழுப்புகிறது.
இயக்குனர் அரவிந்தன் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் பூர்ணா JS மைக்கேல், அதை எடுக்க உறுதுணையாக இருந்த பிரித்விராஜ் ராமலிங்கத்தின் நோக்கம் பாராட்டுக்குரியது. மைக்கேல் வசனங்களும், காட்சிகளும் படத்தை மிகச்சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது. அதை கொஞ்சமும் குறைவில்லாமல் இயக்கியுள்ளார் இயக்குனர். ஆரம்பத்தில் பகலில் வரும் அந்த காட்சிகளும், கிளைமாக்ஸில் அந்த காட்டில் நடக்கும் காட்சிகளிலும் ஒரு உலக சினிமா பார்க்கும்போது எழும் அந்த எண்ணம் மனதில் எழுகிறது. ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அத்தனையும் அதற்கு துணை புரிந்திருக்கிறது. இந்த காட்சிகளை தாண்டி கடைக்கோடி ரசிகனும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் தான் படமே கலகலப்பாக காமெடியாகவும் இருக்கிறது. அதே சமயம் குடிநோயாளிகளுடன் தினமும் வாழும் மக்களுக்கு நிச்சயம் இந்த படம் மறக்க முடியாத படமாகவே இருக்கும். படத்தின் இறுதி காட்சியில் நாயக்ன் பேசும் அந்த வசனங்களை எல்லோரும் தினமும் கேட்டால் குடியை கொஞ்சம் கொஞ்சமாக விட முடியும். ஒழுக்கம் உடையவனுக்கு எந்த ஒரு மேல் அதிகாரியும் தேவை இல்லை என்பது தான் நிதர்சனமான உணமை.
எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ப(பா)டம்…

