ரணம் படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்கத்தில் விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் பாலா நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. பாலாவுக்கு உறுதுணையாக கதையை தாங்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். திரையில் காமெடியனாகவும், நிஜத்தில் ஏழைகளுக்கு உதவும் மாமனிதனாகவும் திகழும் பாலா சினிமாவில் நாயகனாக ஜொலித்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பாலா தன் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவில் ஒரு ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். சொந்தமாக பொருட்கள் இல்லாவிடினும் வாடகைக்கு வாங்கி காதுகுத்து, கல்யாணம், 60ஆம் கல்யாணம் வரை எல்லா நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்திக் காட்டுகிறார். பாலாவுக்கு பணம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமும் உண்டு. ரமேஷ் கண்ணாவின் 60ஆம் கல்யாணத்தை பாலா நடத்தி வைக்கிறார். அந்த விழாவில் வாரிசுகள் இல்லாத பாலாஜி சக்திவேல், அர்ச்சனா தம்பதியும் கலந்து கொள்கிறார்கள். வாரிசுகள் இருந்திருந்தா நமக்கும் இப்படி 60ஆம் கல்யாணம் நடத்தி வைத்திருப்பார்களே என்ற ஏக்கத்தை பாலாஜி அர்ச்சனா பாலாஜி சக்திவேலிடம் சொல்ல, மனைவி ஆசைப்பட்ட அந்த ஒரு விஷயத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சியில் இறங்குகிறார் பாலாஜி சக்திவேல். அர்ச்சனா விரும்பியபடி 60ஆம் கல்யாணத்தை பாலாஜி சக்திவேல் நடத்தினாரா? பாலாவுக்கும், பாலாஜி சக்திவேலுக்கு எப்படி சந்திக்கிறார்கள்? பாலாவின் வாழ்வில் ஒரு அங்கமாக எப்படி மாறுகிறார்கள்? அதன் பின் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.
நாயகன் பாலா. கதாநாயகனாக முதல் படம், தன்னால் முடிந்த அளவுக்கு நல்ல நடிப்பை தர முயற்சித்திருக்கிறார். காமெடி பெரியளவில் இல்லை. ஆனால் சீரியஸான எமொஷனலான காட்சிகளில் பாலாவாகவே நம்மைப் போன்ற சராசரி இளைஞராக நம் கண் முன் நிற்கிறார். குறிப்பாக மழையில் பேசும் அந்த காட்சியில் நல்ல நடிப்பு. அவருக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி. பெரியளவில் எழுதப்படாத கதாபாத்திரமாகவே தோன்றினாலும் ஆங்காங்கே வரும் ஒரு சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். பிறந்த நாள் காட்சியிலும், மழையில் வரும் அந்த காட்சியிலும் பாலாவிடம் பாலா எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை சொல்லும் காட்சியிலும் மனதில் நிற்கிறார்.
பாலா, நமிதா கதாபாத்திரங்களை விடவும் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா தம்பதி தான் படத்தின் ஆணிவேர். இப்படி ஒரு தம்பதி இருப்பார்களா? என எண்ண வைக்கும் ஒரு தம்பதி. அன்புக்கு மறு உருவமாய் திரையில் தோன்றுகிறார்கள். 60ஆம் கல்யாணத்துக்கு ஏங்கும் காட்சியிலும், 90,000 ரூபாய் காட்சியிலும் அர்ச்சனா நம் மனதை கனக்க வைக்கிறார். அந்த திருமணத்திற்காக பாலாஜி சக்திவேல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை கலங்க வைக்கிறது. இறுதிக் காட்சிகள் எல்லாம் நம் மனதில் பெரிய ரணத்தை ஏற்படுத்துவது நிச்சயம். அமுதவாணன், மதன், ஜீவா, முருகானந்தம் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார்கள்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதை படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தது. பாலா, நமிதா ஜோடியையும், பாலாஜி சக்திவேல் அர்ச்சனா ஜோடியையும் மாண்டேஜ் பாடல்களில் காட்டி எடிட்டர் சிவநந்தீஸ்வரன் ரசிக்க வைக்கிறார். படத்துக்கு ஏற்ற அழகான ஒளிப்பதிவை செய்துள்லார் பாலாஜி கே ராஜா.
காந்தி கண்ணாடி என்ற தலைப்பில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ஷெரீஃப், அந்த பெயருக்கு உண்டான காரணத்தை காட்டிய விதமும், அந்த பெயருடன் கடைசி ஷாட்டை முடித்த விதமும் சிறப்பு. இரண்டு காலகட்டங்களை மாற்றி மாற்றி காட்டி அதன் மூலம் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். இந்தியாவுக்கு பரிச்சயமான மிக முக்கியமான ஒரு பிரச்சினையை இந்த கதையில் கொண்டு வந்த விதம் ஐடியா நன்றாகவே இருக்கிறது, அதை இன்னும் கொஞ்சம் கவனமாக எழுதியிருக்கலாம் என்பது நம் எண்ணம். முதல் பாதியை விட இரண்டாவது பாதி கூடுதலாக ரசிக்கும்படி இருக்கிறது. மொத்தத்தில் பாலாவுக்கு நல்ல ஒரு அறிமுக படமாக அமைந்துள்ளது இந்த ‘காந்தி கண்ணாடி’.

