ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள். அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.