சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கிரைம் காமெடி படங்கள் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ரிலீஸ் ஆகும். அதில் ஏதாவது ஒரு படம் மிகச்சிறந்த படமாக அமையும். அப்படி அரிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் ஒன்றாக இந்த வாரம் வெளியாகியுள்ள படம் தான் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்’. விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் என இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வைபவ், அதுல்யா, ஆனந்தராஜ், ஜான் விஜய், சுனில், ரெடின் கிங்ஸ்லி, லிவிங்ஸ்டன், ராஜேந்திரன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பல வருடங்களுக்கு முன் தன்னை போலீஸிடம் இருந்து காப்பாற்றியதற்காகவே வைபவ் மற்றும் மணிகண்டனை தன்னுடனே தம்பிகள் போல வைத்திருக்கிறார் லிவிங்ஸ்டன். லிவிங்க்ஸ்டனின் பாஸ் ஒரு கொள்ளை சம்பவத்தை போலியாக அரங்கேற்ற சொல்லிக் கேட்க, வைபவ் மற்றும் மணிகண்டனை அனுப்பி வைக்கிறார் லிவிங்க்ஸ்டன். அங்கு கொள்ளையடித்த 1.5கோடி பணத்தை எடுத்துக் கொண்டு போகும் வழியில் தொலைத்து விடுகிறார்கள். லிவிங்க்ஸ்டன் மற்றும் அவரது பாஸூக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தாமல் வேறு வழியில் அந்த பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார்கள். பணத்தை உரிய நேரத்தில் ஒப்பாடைக்காமல் போனால் லிவிங்ஸ்டன், அவரது மகள் அதுல்யா, வெள்ளைக்கார மனைவியை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார் அவரது பாஸ் ஹூசைனி. அந்த பணத்தை தயார் செய்ய ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சுனில், ஜான் விஜய், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோருடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையை திட்டமிடுகிறார்கள். வங்கியை கொள்ளை அடித்தார்களா? அந்த காணாமல் போன பணம் என்ன ஆனது? பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா? என்பதே மீதிக்கதை.

வைபவ் வழக்கமான அவரது காமெடியில் ஸ்கோர் செய்கிறார். மணிகண்ட ராஜன் அவரது கதாபாத்திரத்தை இயல்பாக செய்து முடித்திருக்கிறார். திருட்டு தொழிலை விட்டு ஒதுங்கியிருக்கும் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் என நான்கு பேரும் அடிக்கும் ரகளை இரண்டாம் பாதியில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக வங்கி மேலாளரின் பெண்ணை கடத்தும் காட்சி, வங்கிக்குள் நுழையும் காட்சி என ரசிக்க வைக்கிறார்கள். மற்ற காட்சிகளில் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. வைபவ், அதுல்யா ரவி காதல் காட்சிகள் பெரிய அளவில் ரசிக்கும்படி இல்லை. லிவிங்க்ஸ்டன் அடிக்கடி கொடுக்கும் ஷாக் ரியாக்ஷன்ஸ் கலகல. மறைந்த கராத்தே மாஸ்டர் ஹூசைனி கடைசியாக திரையில் பார்க்கும் படம். பழைய நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

டி.இமான் இசை என சொல்லப்பட்டாலும் அப்படி தோன்றவே இல்லை. பாடல்கள் சுமாராகவே இருக்கின்றன, பின்னணி இசை வழக்கமான காமெடி படங்களுக்கே உண்டானது தான். டிஜோ டாமியின் ஒளிப்பதிவு படத்தை கொஞ்சம் கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறது.

இரட்டை இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் & அருண் கேசவ், கிரைம் பின்னணி காமெடி படத்தை தர முயற்சி எடுத்திருக்கிறார்கள். நல்ல நடிகர்கள் அமைந்தும் அதை சரியாக உபயோகப்படுத்தாத உணர்வு. கதையின் காரண காரியங்கள் பெரிய அளவில் இல்லாதது காமெடிக்கு கைகொடுக்கவில்லை. வங்கிக் கொள்ளையை மட்டுமே கதையாக வைத்திருந்தால் கூட கொஞ்சம் காமெடியும் சுவாரஸ்யமும் இருந்திருக்கும். ஆனால் ஹூசைனி வீட்டு கொள்ளை, அமைச்சர் அந்தரங்கள் என கிளைக்கதைகள் வைத்து எதையும் சரியாக செய்யாமல் விட்டது போல அமைந்து விட்டது. மேக்கிங் மற்றும் காமெடி காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி பொழுதுபோக்குக்காக காமெடி படம் பார்ப்பவர் என்றால் போய் பார்த்து ரசித்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *