அரண்மனை 1,2,3 என அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றியை கொடுத்த சுந்தர்.சி அரண்மனை ஃபிராஞ்சைஸியில் இயக்கியிருக்கும் 4வது படம் தான் இந்த அரண்மனை 4. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கருடன் ராம், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். பென்ஸ் மீடியா அருண் குமார் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் குஷ்பூ இணைந்து தயாரித்துள்ளனர். முந்தைய பாகங்களின் வெற்றியை தக்க வைத்ததா இந்த அரண்மனை 4? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர். ஒரு நாள் தீடிரென இவர்கள் இருவரும் இறந்து போகிறார்கள். தகவல் தெரிந்து பல வருட பிரிவில் இருக்கும் தமன்னாவின் அண்ணன் சுந்தர் சி அந்த அரண்மனைக்கு வருகிறார். தங்கை மகள் தலையில் அடிபட்டு கோமாவுக்கு செல்கிறார். தங்கையின் இரண்டு குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு அவரிடம் செல்கிறது. அவர் வந்த பின்பும் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. தங்கை மகளுக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்கிறார் சுந்தர்.சி. இந்த மரணங்களுக்கு காரணம் என்ன? ஏன் இவர்கள் எல்லாம் சாகிறார்கள்? தங்கை மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
சுந்தர் சி வழக்கம் போல அரண்மனை சீரீஸில் வருவது போல இதிலும் முடிச்சுகளை அவிழ்க்கும், அதே சமயம் தன் தங்கை குழந்தைகளை காக்கும் நாயகனாக வருகிறார். படத்தின் கனமான கதாபாத்திரம் செல்வியாக வரும் தமன்னாவுடையது தான். மற்ற படங்களில் வரும் கிளாமர் கதாபாத்திரமாக இல்லாமல் ஒரு தாயாக, உயிரை கொடுத்தேனும் தன் குழந்தைகளை கண்ணியமான ஒரு அம்மாவாக நடித்துள்ளார். முக்கியமான ஒரு காட்சியில் அவரின் நடிப்பு சிறப்பு. அண்ணன் சுந்தர் சி உடனான காட்சிகளில் எமோஷனில் மனதை தொடுகிறார்.
ராஷி கண்ணாவுக்கு ஒரு சாதாரண துணை கதாபாத்திரம் தான் என்றாலும் அழகாக வந்து செல்கிறார். கிளாமருக்கு நாயகியை பயன்படுத்தாமல் கதையின் போக்கில் வந்து செல்லும் இன்னொரு நாயகியாக ராஷி கண்ணாவை பயன்படுத்தி இருக்கிறார் சுந்தர் சி.
அரண்மனைக்கு வந்த பின் யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மறைந்த நடிகர் சேஷூ ஆகியோரின் காமெடிகள் குலுங்கி சிரிக்கும் ரகம். குறிப்பாக அவெஞ்சர்ஸ் எபிசோட் காமெடி அதகளம். கருடன் ராம் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் கதையின் போக்குக்கு வலு சேர்க்கிறார்கள். சிம்ரன் மற்றும் குஷ்பூ இருவரும் நடனமாடும் கிளைமாக்ஸ் பாடல் தியேட்டரில் சும்மா கிழி.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை கூட்டுகிறது. படத்தில் எது செட், எது விஎஃப்எக்ஸ், எது ரியல் லொகேஷன் என கண்டுபிடிக்க முடியாத வகையில் அனைத்தும் செம்ம சிங்க். படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் கச்சிதம். இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் மெலோடி பாடலும், போஸ்ட் க்ரெடிட் பாடலும் சிறப்பு.
சுந்தர் சி 2 மற்றும் 3ஆம் பாகங்கள் மாதிரி வழக்கமான விஷயங்களையே தூவி ஏமாற்றாமல் இந்த படத்தில் கதைக்கு மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. பாக் என்ற விஷயத்தை திரைக்கதையில் அவர் புகுத்திய விதம் சிறப்பு. வழக்கமான இரட்டை அர்த்தம், திகட்டும் கவர்ச்சி என வைக்காமல் படத்தின் ஆதாரமான எமோஷனல் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக நாயகிகளை பயன்படுத்திய விதமும் சிறப்பு. குடும்பத்துடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஜாலியாக பார்த்து விட்டு போகும் ஒரு பொழுது போக்கு திரைப்படம் தான் இந்த அரண்மனை 4.