ஒரு திரைப்படத்தின் ட்ரைலர், டீசர், பாடல்கள் என எதையுமே பார்க்காமல் நேரடியாக ஒரு சில போஸ்டர்களை மட்டுமே பார்த்து விட்டு என்ன மாதிரியான திரைப்படம் இது என்ற ஒரு கணிப்பே இல்லாமல் பார்க்கும் படங்கள் ஒரு வித உணர்வை கொடுக்கும். சில படங்கள் அற்புதமான உணர்வையும், சில படங்கள் அய்யய்யோ வந்து மாட்டிக்கிட்டோமே என்ற உணர்வையும் தந்தது உண்டு. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் “ஆலன்” திரைப்படத்தின் போஸ்டர் மட்டுமே பார்த்து விட்டு ஏதோ வித்தியாசமான களமா இருக்கே என்று பார்த்திருக்கிறோம். எந்த விதமான தாக்கத்தை இந்த படம் நமக்கு தந்தது என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மலை கிராமம் ஒன்றில் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் சகோதரர்கள், இதில் மூத்தவர் பொறுப்பான அனைவர் மீது அன்பு செலுத்துபவர். அவரின் இரண்டு தம்பிகள் ஊதாரிகள், அண்ணனை மதிப்பதில்லை. இதில் மூத்த சகோதரரின் மகன் சிறுவன் தியாகு, தாத்தாவின் ஊக்கத்தால் புத்தகங்களை வாசிப்பது, எழுதுவது என அதன் மீது ஆர்வம் கொள்கிறான். தியாகுவின் இரண்டு சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் விபத்தில் பெற்றோரை இழக்கிறான். சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்த தன் தந்தையின் நண்பர் மகள் தாமரையும் அந்த விபத்தில் இறந்து விட்டதாக நினைக்கிறார். அந்த விபத்து கடுமையான மன அதிர்ச்சியை ஏற்படுத்த, காசிக்கு சென்று விடுகிறான். காசியில் ஒரு சாமியாரின் ஆதரவு கிடைக்க, ஆன்மீகத்தில் தன்னை செலுத்து பற்றற்ற நிலையில் வாழ பயிற்சியில் ஈடுபடுகிறார். பல ஆண்டு பயிற்சி பெற்றும் தன்னால் துறவியாக முடியவில்லை என்பதை உணர்கிறார். ஆதரவு கரம் நீட்டிய சாமியார் ‘உமக்கு பிடித்தது எழுதுவது தானே, அதை செய் என அனுப்பி வைக்கிறார். வழியில் ஜெர்மனியிலிருந்து இந்திய கலாச்சாரத்தை பற்றி ஆய்வு செய்ய வந்த ஜனனி தாமஸ் என்ற இளம் பெண்ணைச் சந்திக்கிறார். காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் ஜனனி தாமஸ் இறந்து விடுகிறார். இதனால் மீண்டும் வாழ்க்கையில் வெறுமையை சந்திக்கும் தியாகு, ரிஷிகேஷ் என மீண்டும் வடக்கு நோக்கி செல்கிறார். பின் ஜனனி தாமஸ் என்ற பெயரில் எழுதி அதை நண்பர் மூலம் புத்தகமாகவும் பதிப்பிக்கிறார். அவர் எழுதிய ஆலன் என்ற அந்த புத்தகம் பிரபலமாகிறது. அவர் எழுதிய புத்தகத்தை தேடி சென்னையில் உள்ள நூலகத்திற்கு வருகை தருகிறார். அங்கு எதிர்பாராத விதமாக தாமரையை சந்திக்கிறார். அதை எப்படி உணர்ந்தார்கள்? அவர்களுக்குள் மீண்டும் காதல் பூத்ததா? இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை ஒரு வாழ்க்கை அனுபவமாக திரையில் விரித்திருக்கிறார் இயக்குனர் சிவா.
நாயகன் வெற்றி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரம். துறவியாக முயற்சித்து பின் சாதாரண மனிதனாக, எழுத்தாளனாக ஆவது என முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தியாகுவாக அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
ஜனனி தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் மதுரா அழகு. கொஞ்சி கொஞ்சி அவர் பேசும் தமிழும், அவரின் தமிழ்ப்பற்றும் இன்றைய நம் இளம் தலைமுறை கவனிக்க வேண்டிய விஷயம். அனு சித்தாரா கொஞ்ச நேரமே வந்தாலும் தன் அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். இரண்டு நாயகிகளுமே பொருத்தமான தேர்வு. விவேக் பிரசன்னா, அருவி மதன், ஹரீஷ பேரடி உட்பட மற்ற நடிகர்களும் தங்கள் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
காசி, ரிஷிகேஷ், மேற்கு தொடர்ச்சி மலை, சென்னை என பல இடங்களுக்கு பயணிக்கும் உணர்வை தன் ஒளிப்பதிவின் மூலம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையில் பாடல்களும் ஓகே ரகம், பின்னணி இசையின் கதையின் போக்கில் இருக்கிறது. உணர்வுகளை கடத்துகிறது.
எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீவிர ஆர்வம் கொண்ட இயக்குனர் ஆர்.சிவா, எழுத்தாளரின் வாழ்வியலை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் ‘ஆலன்’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாக அறிந்தோம். இலக்கியம், வாசிப்பு, எழுத்து என்ற களமே இங்கு குறுகிய வட்டத்தை எட்டக்கூடிய அம்சம். அப்படி இருக்கும் பட்சத்தில் வெகுஜன ரசிகர்களை சென்று சேர்வது மிகவும் கடினம். அதிலும் திரைக்கதையின் வேகம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. திரைக்கதையை நான் லீனியர் பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதுவே பலம், பலவீனம் என இரண்டாகவும் அமைகிறது. இறுதியாக ஆலன் என்றால் ஏதோ ஆங்கில பெயர் என்று நினைப்பவர்களுக்கு, ஆலன் என்பது ஆங்கில தலைப்பு அல்ல, ஆலகால விஷத்தை அருந்திய சிவன் என பொருள்.