சின்ன பட்ஜெட்டில் ஒரு சில நல்ல சினிமாக்கள் அவ்வப்போது வெளியாகும். அவற்றை கண்டுபிடிப்பதே அரிது. 25 படங்கள் பார்த்தால் அதில் ஒரு நல்ல படம் கிடைக்கும். அதுவும் பெரிய அளவில் மக்களை சென்று சேருவதும் இல்லை. இந்த வாரம் நாம் பார்த்த ஒரு திரைப்படம் “ஆரகன்”. நாம் சொன்ன நல்ல சினிமா கேட்டகிரியில் சேருமா? இல்லையா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் மைக்கேல் தங்கதுரை நாயகி கவிப்ரியாவை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்லி, அவரும் ஓகே சொல்கிறார். தாய் தந்தை இல்லாமல் எந்த ஆதரவும் இல்லாமல் வளரும் நாயகி நாயகன் காதலில் மகிழ்ச்சியாக இருக்கிறார். பணத்தேவைக்காக மலைப்பிரதேசம் ஒன்றில் ஒரு வீட்டில் தனிமையில் வசிக்கும் ஒரு அம்மாவை (ஸ்ரீரஞ்சனி) கவனித்துக் கொள்ள நல்ல சம்பளத்தில் 6 மாத காண்ட்ராக்டில் சேர்கிறார் நாயகி கவிப்ரியா. 70,000 சம்பளம் என்பதால் இவ்ளோ சம்பளம் தருவதால் சந்தேகம் அடையும் மைக்கேல் அவரை போக வேண்டாமென தடுக்கிறார். ஆனாலும் அவரை கன்வின்ஸ் செய்து அங்கு வேலைக்கு செல்கிறார் நாயகி. போன இடத்தில் போக்குவரத்து, செல்போன் சிக்னல், ஆள் நடமாட்டம் என எதுவும் இல்லாமல் தனித்த இடமாக இருக்கிறது. அந்த வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார் அந்த அம்மா. வீட்டில் இருக்கும் பெயிண்டிங்கும் மர்மமாக நெகடிவ்வாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தனிமையில் ஒரு மாதிரியாக ஆகிறார். வயதான தோற்றத்தையும் அடைகிறார். அவரை சுற்றி என்ன நடக்கிறது? மர்மம் என்ன? காதலன் அவரை வந்து சந்தித்தாரா? என்பதே மீதிக்கதை.
நல்ல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் மைக்கேல் தங்கதுரை, இந்த படத்திலும் நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். கதாநாயகன் இவர் தான் என்றாலும் சுயநலத்திற்காக எதையும் செய்யும் அவரது கதாபாத்திர மாற்றம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.
அன்புக்காக எதுவும் செய்யும் அப்பாவியான ஒரு கதாபாத்திரத்தில் நல்ல ஒரு அறிமுகம் கிடைத்திருக்கிறது நடிகை கவிப்ரியாவுக்கு. காதல் மகிழ்வதும், தன்னை அறியாமல் மாட்டிக்கொண்டது கூட தெரியாமல் வாழும் அவரது கதாபாத்திரம் நம்மை அவர் மீது பரிதாபப்பட வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கண்கலங்க வைக்கிறார்.
தனிமையில் மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரம் யார் இவங்க? என்ன நோக்கம்? என தெரியாத மாதிரி நடித்து நம்மை ஈர்க்கிறார். ஒரு சில காட்சிகளில் பயமுறுத்துகிறார். கலைராணி கதாபாத்திரமும் மிகச் சிறந்த ஒரு கதாபாத்திரம், சிறந்த ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி, அடர்ந்த வனப்பகுதியை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆள் அரவமற்ற அந்த பகுதிகளின் பதட்டத்தை நமக்குள் கடத்துகிறார். விவேக் – ஜெஷ்வந்த் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம். சாய் தக்ஷா படத்தொகுப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பலம். திடுக்கிடும் திருப்பங்களை சரியான நேரத்தில் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
ஆரம்பத்தில் அனிமேஷனில் ஒரு புராண கதையை சொல்லி, அதை சமகாலத்தில் நடக்கும் கதையுடன் இணைத்த விதம் மிகச்சிறப்பு. ஏதோ ஒரு அனிமேஷன் என சரியாக கவனிக்காமல் விட்டால் கதை புரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையாக பல திருப்பங்களோடு இரண்டு மணி நேர படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்.