ஹிட் லிஸ்ட் – திரை விமர்சனம்

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது RK Celluloids நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூர்யகதிர், கார்த்திகேயன் என இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். சிலர் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது முதல் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகி வெற்றி பெறுவார்கள். இன்னும் சிலர் முதல் படத்திலேயே கமெர்சியல் அம்சங்களை அனைத்தும் இருக்கும்படி ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் என அனைத்திலும் தன் திறமையை நிரூபிக்க களம் இறங்குவார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஹீரோ எப்படி அறிமுகம் ஆகியிருக்கிறார்? வெற்றிக் கனியை பறித்தாரா? என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஐடி இளைஞரான விஜய் கனிஷ்கா தன் அம்மா மற்றும் தங்கையுடன் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் தென் சென்னையில் இருந்து வடசென்னைக்கு acp-யாக மாற்றப்படுகிறார் சரத்குமார். சுமூகமாக போய்க் கொண்டிருந்த விஜய் வாழ்வில் திடீரென ஒரு நாள் அவரது அம்மாவையும், தங்கையையும் ஒருவன் கடத்திக் கொண்டு போய் வைத்து, அவர்களை உயிருடன் விட வேண்டுமானால் சில விஷயங்களை செய்ய வேண்டும் என சொல்கிறான். இரண்டு முக்கியமான பெரும் புள்ளிகளை கொலை செய்யச் சொல்லி அந்த மாஸ்க் மேன் மிரட்டி, அவற்றை டிவியிலும் லைவ்வாக ஒளிபரப்பு செய்கிறான். எந்த வம்புக்கும் செல்லாமல், பிற உயிர்களுக்கு தீங்கு நினைக்காத விஜய் அந்த மிரட்டல்களை ஏற்கிறாரா? தாய் மற்றும் தங்கையை காப்பாற்றினாரா? முகமூடி மனிதன் அதை எல்லாம் எதற்காக செய்ய சொல்கிறான் என்பதே மீதிக்கதை.

விஜய் கனிஷ்கா முதல் படமே நல்ல அறிமுகம். ஆக்ஷன் காட்சிகளிலும் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். தன் திறமை எல்லாவற்றையும் காட்டுறேன் பார் என டான்ஸ், காமெடி, பில்டப் என எதையும் திணிக்காமல் கதைக்கு தேவையான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு நடித்தது பாராட்டுக்குரியது. முதல் படத்திலேயே ஒரு ஒரு சமூக விஷயத்தை எடுத்து பேசியிருப்பதும் பாராட்டத்தக்க அம்சம். முழுக்க ஆக்ஷன் மற்றும் எமோஷன் தான் அவரின் முதல் படத்தில். அடுத்தடுத்த படங்களில் காமெடி, காதல், டான்ஸ் என பட்டைய கிளப்பும் முயற்சிகளை தாராளமாக செய்யலாம்.

விஜய் அறிமுகமான காலகட்டத்தில் விஜயகாந்த் எப்படி அவருக்கு பக்கபலமாக ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தாரோ அந்த மாதிரி விஜய் கனிஷ்காவுக்கு சரத்குமாரின் ஆதரவு. முக்கிய காட்சிகளில் அவரின் பங்களிப்பு படத்துக்கு பக்க பலம். காவல்துறை அதிகாரியாக கச்சிதம். ஆக்ஷனிலும் அதகளம். கௌதம் மேனன் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நடித்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். சமுத்திரகனி ஒரு காட்சியில் வந்தாலும் நம்மை கண் கலங்க வைக்கிறார். ஸ்மிருதி வெங்கட் கதையின் முக்கிய கதாபாத்திரம், அவரின் பரிதவிப்பு, இயலாமை, யாராவது உதவ வர மாட்டார்களா? என ஏங்கும் ஏக்கம் என சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அபி நக்ஷத்ரா, ‘கே.ஜி.எஃப்’ ராமச்சந்திரா, ‘மைம்’ கோபி, அபிநயா, சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன் மற்றும் அனுபமா குமார் ஆகியோரும் நன்றாகவே நடித்துள்ளனர்.

C.சத்யா இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசையில் அதிர வைக்கிறார். குறிப்பாக சேஸிங், ஆக்ஷன் காட்சிகளில் அதிரும் இசை. ராம்சரண் ஒளிப்பதிவில் வட சென்னை, தென் சென்னை என எல்லாமே அருமை. சந்து பொந்துகளிலும் புகுந்து வித்தை காட்டியிருக்கிறது அவரின் கேமர. ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பலம். சரத்குமார், விஜய் என ஆளுக்கு ஏற்றார்போல சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்கள் விக்கி மற்றும் ஃபீனிக்ஸ் பிரபு.

சூர்ய கதிர், கார்த்திகேயன் என இரண்டு இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டி மற்றும் புத்திசாலித்தனத்தில் உருவாகி இருக்கிறது இந்த ஹிட் லிஸ்ட். ஹாலிவுட் ஸ்டைலுக்கு பழக்கப்பட்ட முகமூடி மனிதன், குறிப்பிட்ட நேரத்தில் சொன்னதை முடிக்கணும் போன்ற திரைக்கதை உத்தியை ஒரு எமோஷனலான ஒரு சமூக அக்கறை கதையில் இணைத்து பின்னியிருக்கிறார்கள். அறிமுக ஹீரோ, சீனியர் ஹீரோ என இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து இரண்டு குதிரை சாரட்டை பேலன்ஸ்டாக ஓட்டியிருக்கிறார்கள். குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் தந்த, கோடையில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அமைந்த ஒரு நல்ல திரைப்படம் தான் இந்த ஹிட் லிஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *