தமிழில் மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களையும், அனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்தையும் இயக்கிய நாகா, நாட்டுப்புற கதைகளை அறிவியல் கலந்து திரில்லராக கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட். மர்மதேசம், விடாது கருப்பு இப்போது பார்த்தாலும் ஒரு வித பயத்தை கொடுக்கக் கூடிய தொடர்கள் அவை. தற்போது “ஜீ5”க்காக அவர் உருவாக்கியிருக்கும் இணையத்தொடர் தான் “ஐந்தாம் வேதம்”. ரிக், யஜூர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐந்தாவதாக வேதம் ஒன்று உள்ளது, அதன் மூலமாக தான் பிரம்மா மனிதர்களையே படைத்தார் என்ற ஒரு கற்பனை கதையை புராணம், அறிவியல் கலந்து சொல்லியிருக்கிறார்.
இந்த தொடரின் கதைப்படி, “தென் தமிழகத்தில் தென்காசிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் உள்ள மிக பழமையான சிவாலயத்தின் ரகசிய இடத்தில் இருக்கும் ஐந்தாவது வேதம் வெளி வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட நாளுக்காக அந்த கோவில் பூசாரி காத்துக் கொண்டிருக்கிறார். அதே வேளையில் அந்த தேதிக்கு 16 நாட்கள் இருக்கும்போது இறந்த தன் தாய்க்கு திதி கொடுக்க காசிக்கு செல்லும் சாய் தன்ஷிகாவிடம் ஒரு அரிய விஷயத்தை கொடுத்து அதை அந்த கோவிலில் கொண்டு சேர்க்க சொல்கிறார் ஒரு பண்டிதர். எரிச்சலில் இருக்கும் தன்ஷிகா அதை தன்னால் செய்ய முடியாது தனக்கு வேறு வேலை இருக்கிறது என மறுக்கிறார். ஆனால் விதி அவரை அந்த வழியிலேயே போக வைக்கிறது. அதே நேரம் அந்த வேதத்தின் மூலம் இந்த உலகத்தில் மனிதர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் ஐந்தாவது வேதத்தை தேடுகிறார்கள். இன்னொரு புறம் 3டி பிரிண்ட் மூலம் அப்படியே அசல் மாமிசத்திலான உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபடுகிறது. அவர்களும் ஐந்தாம் வேதத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் சுற்றி சுற்றி வரும் அந்த ஐந்தாம் வேதம் என ஒன்று இருப்பது உண்மையா? அதை கண்டுபிடித்தார்களா? அந்த முயற்சியில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கும் எட்டு பாகங்களை கொண்ட தொடரே ‘ஐந்தாம் வேதம்’.
கதையின் நாயகியாக சாய் தன்ஷிகா. ஒரு வித எரிச்சலுடனே சுற்றூம் கதாபாத்திரம், எதையுமே காது கொடுத்துக் கூட கேட்க விரும்பாத ஒரு கதாபாத்திரம். ஒரு கட்டத்தில் ஆடியன்ஸ் நமக்கே அவர் மீது எரிச்சல் வரும் அளவுக்கான கதாபாத்திரம். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால் முக்கிய கதாபாத்திரங்களில் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வழக்கறிஞராக தேவதர்ஷினியும், கோவில் பூசாரியாக ஒய்.ஜி.மகேந்திரனும் நல்ல தேர்வு. கிரிஷா குரூப் கிராமத்தி பெண், AI கதாபாத்திரம் என இரண்டு வித்தியாசமான பரிணாமம், அசத்தியிருக்கிறார். ராம்ஜி, பொன்வண்ணன், சண்முகராஜன், மேத்தீவ் வர்கீஸ், உயரம் குறைவான மனிதர்கள் என அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக செய்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு மிக முக்கிய பலம், குறிப்பாக தென்காசியில் கதைக்களத்தை அவர் காட்சிப்படுத்திய விதமும், கோவில் சம்பந்தபட்ட காட்சிகளும் உண்மையில் ஒரு வித திகில் உணர்வை கொடுக்கிறது. ரேவாவின் பின்னணி இசை நாகாவின் கதைகளுக்கு ஏற்ற கச்சிதமான அம்சம்.
இயக்குநர் நாகா, ஐந்தாம் வேதம் என்ற ஒரு கற்பனைக்கு உயிர் கொடுத்து புராணம் மற்றும் அறிவியலை கலந்து சொன்ன விதம் மிகவும் சுவாரஸ்யம். ஒரு சில எபிசோடுகளை பார்க்கும்போது மர்மதேசம் காலத்து நினைவுகள் வந்து போவது உறுதி. இன்றைய சூழலில் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் AI என்று சொல்லப்படும் ’செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தையும் கதையில் கொண்டு வந்த விதம் சிறப்பு. ஆரம்ப எபிசோடுகள் கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் ஐந்தாவது எபிசோடுக்கு பிறகு இன்னும் சுவாரஸ்யம் ஆகி இறுதி வரை நம்மை கதையுடன் ஒன்றச் செய்கிறார் நாகா. இன்றைய வெட்டு குத்து கதைகளுக்கு மத்தியில் இந்த மாதிரி தொடர்களும் தேவை, ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்பது உறுதி.

