எட்டுத் தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து மெல்லிய மனதை தொடும் ஒரு கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படம் “3BHK”. ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் உள்ள உச்சபட்ச ஆசை தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தான். அப்படி பல கோடி மக்களின் கனவான சொந்த வீடு ஆசையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தன் குடும்பத்தில் தம்பி, தங்கை எல்லாம் நன்றாக படித்து நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சொந்த வீடு இல்லாமல் மனைவி, மகன், மகள் என கஷ்டப்படும் சரத்குமார் தங்களுக்கென்று வீடு வாங்க வேண்டும் என முயற்சிகள் எடுக்கிறார். அவரது மனைவி தேவயாணி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் என எல்லோருமே அந்த கனவை நிறைவேற்ற அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு ஒரு GOAL செட் செய்து அந்த பணத்தை சேர்த்து வைக்க, அந்த கால ஓட்டத்தில் விலையும் ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது. அதை சேர்த்துக் கொண்டு வந்து பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை வந்து அதை தகர்க்கிறது. மகன் சித்தார்த் அந்த கனவை நிறைவேற்றுவார் என சமாதானமாகிறார். ஆனால் பிரபுவின் வாழ்க்கை அதை விட மோசமாக தடுமாற்றத்திலேயே இருக்கிறது. இதற்கிடையில் எதிர்கால கனவை நோக்கி ஓடி ஓடி களைப்பில் இருக்கும் அந்த குடும்பத்தினரின் கனவு நிறைவேறியதா? சொந்தமாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே மீதிக்கதை.
சரத்குமார் வீட்டின் தலைவராக ஓடி ஓடி உழைத்து, களைத்துப் போன ஒருவராக மிக கச்சிதமாக அந்த கதபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது கேரியரில் இப்படி ஒரு படம் இதுவரை செய்தது இல்லை என சொல்லும் அளவுக்கு நம்மை அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றி, அவருக்காக நம்மை ஏங்க வைக்கிறார். அவரது மனைவியாக தேவயாணி கால ஓட்டத்தில் இந்த தம்பதியின் ஏக்கம், கனவு, தியாகம் என அத்தனையையும் இருவரும் மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். நடை, உடை பாவனை என அத்தனையிலும் அந்த தாய், தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
நாயகன் சித்தார்த். கதையின் நாயகனாக, தந்தையின் லட்சியத்துக்கு பாடுபடும் ஒரு மகனாக மனதில் நிற்கிறார். இயலாமையில் புழுங்கும் காட்சிகளிலும், குடும்ப கஷ்டத்தை நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும், தொலைந்த காதலை மீண்டும் மீட்டெடுப்பதிலும், ஐடி கம்பெனியில் அத்தனை மன உளைச்சலையும் தாங்கிக் கொண்டு, அதை விட்டு வெளியில் வர முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும், அவரது வாழ்க்கையே மற்றவர்கள் தீர்மானிப்பதில் தான் அமைந்திருக்கிறதே என்பதை உணரும் காட்சிகளிளும் அசாத்தியமாக நடித்து ஒரு மகனாகவே நம் மனதில் நிற்கிறார்.
சித்தார்த்தின் தங்கையாக வரும் மீதா ரகுநாத். அண்ணனுக்காக, குடும்பத்துக்காக தன் வாழ்க்கையில் அட்ஜஸ்ட் செய்து வாழும் ஒரு கதாபாத்திரத்தில் நம்மை கலங்க வைக்கிறார். இறுதி வரை பெற்றவர்களுக்காக நிற்கும் மகளாக மனதை கவர்கிறார். நாயகி சைத்ரா ஆச்சார் சித்தார்த் மீது வைத்துள்ள அன்பும், இரண்டாம் பாதியில் அந்த அன்பு குடும்பத்தினர் மீதும் பரவும் காட்சிகளில் நம்மை நெகிழ வைக்கிறார்.
ஒரு சில காட்சிகளில் வரும் யோகி பாபுவின் ஒன்லைனர்கள் ரசிக்க வைக்கின்றன. வீடு புரோக்கராக வந்து கடைசியில் இவர்களின் குடும்ப நண்பராகவே மாறி விடும் யோகிபாபு இறுதி காட்சியில் செய்யும் செயல் மனதை நெகிழ வைக்கிறது.
பெரும்பாலும் வீட்டிற்குள் நடக்கும் கதையை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அம்ரித் ராம்நாத் இசை படத்தின் ஆகம்ப்பெரும் பலம். படம் முழுக்க இழையோடும் பின்னணி இசை நம்மை படத்திற்குள் ஒரு மெல்லிய உணர்வுடன் பயணிக்க வைக்கிறது.
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இப்படி ஒரு மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மிடில் கிளாஸ் கதையை தேர்ந்தெடுத்ததும், அதை திரையில் மிக அழகாக வடித்திருப்பதும் முதல் வெற்றி. கதாபாத்திர தேர்வு வெற்றியிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரே படத்தில் லட்சியம், வீடு என்பது ஒரு மரியாதை என சொல்வது, அப்பா, மகன் தலைமுறை இடைவெளியை வைத்து கதையை நகர்த்திய விதம், எதிர்காலம் எதிர்காலம் என சொல்லி சொல்லியே நிகழ்காலத்தில் வாழ மறந்து விட்டது மிடில் கிளாஸ் என்பதை சொல்லிய விதம், அடித்து கொடுமைப்படுத்தினால் தான் அது சித்ரவதையா என சுட்டிக் காட்டி அதை சரத்குமாரே செய்ததை உணரும் தருணம், இது தான் சரி, இது தான் நல்லது என எடுக்கும் முடிவுகளிலும் தவறு நடக்கும் என்பதை உணர்ந்து கொள்வது என பலவிதமான உணர்வுகளை சொல்லி படத்தில் ஒரு உணர்வுக்குவியலாய் தந்துள்ளார். படம் பார்க்கும்போது தொண்டை அடைப்பதும், கண்ணீர் பெருக்கெடுப்பதும் நிகழும். படம் முடியும்போது ஒரு நிம்மியதியும், நம்பிக்கையும் மனதில் எழும். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய முக்கியமான படமாகிறது இந்த 3BHK.