சொட்ட சொட்ட நனையுது – விமர்சனம்!

இன்றைய இளம் தலைமுறையின் மிக முக்கியமான உளவியல் சிக்கல் முடி உதிர்தல் தான். தினம் தினம் தலைமுடி உதிர்வதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் நிலை இப்படி என்றால் இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் வாழும் இளைஞர்களின் நிலை ரொம்பவே பரிதாபம். பலர் அதை கடந்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள். சிலர் அதனால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது என எண்ணுகிறார்கள். அப்படி ஒரு உளவியல் பிரச்சினையை காதல், காமெடி கலந்த படமாக தந்திருப்பதே ‘சொட்ட சொட்ட நனையுது’. அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்க, நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி, KPY ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நிஷாந்த் ரூஸோவுக்கு அவர்கள் வீட்டில் திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் சொட்டை தலையை காரணம் காட்டி மறுத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஷாலினி ஒப்புக் கொள்ள திருமணம் வரை செல்கிறது. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்துகிறார் நாயகன். பின் தலைமுடி சிகிச்சைக்கு சென்று தலைமுடியுடன் வர, உடனே சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்ஸர் வர்ஷினி உடன் திருமணம் நிச்சயமாகிறது. இதைத்தொடர்ந்து திருமணம் நடந்ததா? நாயகன் வாழ்க்கை அவர் நினைத்த மாதிரி மாறியதா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நிஷாந்த் ரூஷோ. முந்தைய படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு இந்த படத்தில் வேறு ஒரு பரிமாணம். சொட்டைத் தலையுடன் படம் முழுக்க வரும்போது அவரின் மேக்கப்பை தாண்டி நாமே அவரை நம்ப ஆரம்பித்து விடும் அளவுக்கு நடித்திருக்கிறார். தொப்பி அணிந்தால் முடி கொட்டும் என சொல்வதில் ஆரம்பித்து பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

நாயகிகளாக பிக்பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி. அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக ஏற்று நடித்திருக்கிறார்கள். வர்ஷினி இந்த காலத்து சோஷியல் மீடியா மோகத்தில் சுற்றும் இளம்பெண்களை அப்ப்டியே பிரதிபலிக்கிறார். ஷாலினி படித்த அதே சமயம் கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கலக்கப் போவது யாரு ராஜா, குக் வித் கோமாளி புகழ் மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அழகாகவே செய்துள்ளனர்.

ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கல் ஓகே ரகம், பின்னணி இசையும் காமெடி படத்திற்கு ஏற்ப தந்துள்ளார். ராயீஸ் ஒளிப்பதிவு காரைக்குடியை மிக யதார்த்தமாக காட்டியிருக்கிறது. ஆனாலும் குறைந்த நாட்களில் அவசர அவசரமாக படம் பிடித்த உணர்வை தருகிறது.

இயக்குனர் நவீத் s ஃபரீத், எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் படத்தை அணுகியுள்ளார். முழுக்க காமெடி ட்ரீட்மெண்டில் பயணிக்கும் படத்தில் சொட்டையால் மன வேதனையில் இருப்பவர்கள் படும் கஷ்டங்களை சொல்லும் காட்சிகளும் கூட அழுத்தமாக பதியவில்லை. கலக்கப்போவது யாரு புகழ் ராஜா கதை, வசனம் ஓரளவு கை கொடுத்துள்ளது. இரண்டாம் பாதியில் திருமணத்தை நிறுத்த நடக்கும் களேபரங்களும் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் எந்த முன்முடிவும் இன்றி ஒரு தடவை நிச்சயம் போய் ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *