VERUS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சை-ஃபை கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
சூரியபிரதாப் இயக்கும் இந்த படத்தில், கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நட்சத்திரம் அபர்ஷக்தி குரானா தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், இப்போது தமிழ் ரசிகர்களையும் கவர்வார் என்ற நம்பிக்கை குழுவினருக்கு உள்ளது.
முக்கிய காட்சிகள் இடம்பெற்ற இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில், இரு முன்னணி நடிகர்களின் பங்களிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் உணர்ச்சி நிறைந்த கதையையும்,நேரத்துடன் போட்டியிடும் சை-ஃபை த்ரில்லர்கான விறுவிறுப்பையும் ஒருங்கே தரவுள்ளது.
இந்த படத்தில் பாவ்யா திரிகா நாயகியாகவும், மூத்த நடிகர் வை.ஜி. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர்கள்: தனிஷ்டன் பெர்னாண்டோ, ராஜராஜன் கனனசம்பந்தம், சஞ்சய் சங்கர், ஷைக் முஜீப் – VERUS புரொடக்ஷன்ஸ்.
இயக்குனர் சூரியபிரதாப் எஸ் கூறுகையில், “முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர்ஷக்தி இணைந்து தோன்றும் காட்சிகள் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சென்னை நகரின் பரபரப்பான பின்னணி இந்த படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றார்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் மேலும் அதிரடி காட்சிகளும், ரசிகர்களுக்கான பல அசத்தலான ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.