மலையாள சினிமாவில் எப்போதுமே சின்ன பட்ஜெட்டில் நல்ல நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாக்கள் வெளிவரும். அத்துடன் பல புதுப்புது முயற்சிகளையும் குறைந்த பட்ஜெட்டில் சாத்தியமாக்கி அதை வெற்றியாகவும் மாற்றும் சக்தி உண்டு. குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை எடுத்து அதை பான் இந்தியா அளவில் வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினர். அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் “லோகா: சேப்டர் 1 சந்திரா. கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க நாயகியை மையப்படுத்திய படம். எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வந்து, அங்குள்ள ரெஸ்டாரெண்டில் இரவு ஷிஃப்டில் பணியாற்றுகிறார். அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் நஸ்லென், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் தங்கி படித்து வருகிறார்கள். அவர்கள் கல்யாணியால் ஈர்க்கப்படுகிறார்கள். கல்யாணி சாதாரண பெண் இல்லை, அவருக்கு ஏதோ சக்திகள் இருக்கிறது. அந்த நேரத்தில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பல் ஒன்று பெங்களூரில் சுற்றி வருகிறது. அந்த கும்பலுக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்தி உதவியாக இருக்கிறார் இன்ஸ்பெக்டர் சாண்டி. ஒரு கட்டத்தில் அந்த கும்பலுக்கும் கல்யாணிக்கும் இடையே மோதல் உருவாக, தன் அடையாளத்தை வெளியில் காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் கல்யாணி. எதிரிகளை அழித்து நல்லவர்களை காப்பாற்றினாரா? உண்மையின் அவர் யார்? அவரின் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.
ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் அதீத சக்தி கொண்ட பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் அதகளப்படுத்துகிறார். படம் முழுக்க அதிகம் சிரிக்காமல் சைலண்டாக மறைந்து வாழும் கதாபாத்திரத்தில், ஆக்ஷன் காட்சிகளில், நஸ்லன் உடனான காட்சிகளில் என தன் நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். அளவான நடிப்பின் மூலம் அந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
நஸ்லன் கல்யாணி மீது காதல் வயப்படும் கதாபாத்திரத்தில் வழக்கம் போல நம்மை ரசிக்க வைக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்கிறார். சந்து சலீம்குமார், அருண் குரியன் ஆகியோரும் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக சாண்டி மாஸ்டர். அவரது பார்வையாலே நம்மை மிரள வைக்கிறார். இரண்டாம் பாதியில் வில்லத்தனத்தில் இன்னும் மிரட்டுகிறார். டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் கேமியோவில் வந்து தியேட்டரை அதிரச் செய்கிறார்கள்.
வழக்கம் போல ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். சூப்பர் ஹீரோ படத்துக்கு உண்டான அதிரடியான இசையில் நம்மை எழுச்சியிலேயே வைத்திருக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு நாம் ஏதோ வெளிநாட்டு படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என எண்ண வைக்கிறது. நியான் லைட்டிங், பிரமாண்டமான காட்சியமைப்பு என அசத்தியிருக்கிறார். யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள் உலகத் தரம். அந்த பீரியட் போர்ஷனில் வரும் நீலி சண்டைக் காட்சியும் அடேங்கப்பா ரகம். வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் கூடுதல் பாராட்டுக்குரியது.
இயக்குனர் டொமினிக் அருண் நம்ம ஊர் பட்ஜெட்டில் ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்து பழகியது போன்ற ஒரு சூப்பர் ஹீரோ படத்தை தந்திருக்கிறார். ஆரம்பத்திலேயே இந்த உலகத்தை அவர் கட்டிய விதம், அதில் உலவும் கதாபாத்திரங்களின் தன்மை, கதை சொல்லலில் பயன்படுத்திய உத்தி என எல்லாமே சிறப்பான முயற்சி. பல கேள்விகளுக்கும் ஆங்காங்கே திரைக்கதை மூலம் பதில் சொல்லியிருக்கிறார். அந்த சக்தி கிடைத்ததன் பின்னணி, அந்த சக்தியின் வரையறை என எல்லாவற்றையும் தெளிவாக காட்டியுள்ளார். அடுத்தடுத்து பல படங்கள் வெளிவரும் இந்த தொடரில் முதல் அத்தியாயமான சந்திரா மூலம் இந்த லோகா உலகத்தை உருவாக்கிய விதத்திலும், அதை ரசிக்கும் விதத்தில் கொடுத்த வகையிலும் சிறந்த படமாக தந்திருக்கிறார் இயக்குனர்.