தமிழ் சினிமாவில் Stalking என்ற கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பல முன்னணி ஹீரோக்களே நாயகிகளை விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். அந்த Stalking என்ற விஷயம் தவறு என காலப்போக்கில் மாற்றம் அந்த நிலை முற்றிலும் மாறி திரைப்படங்களில் காதல் காட்சிகளே வேறு பரிணாமத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது இந்த வார, வெளியாகி இருக்கும் கடுக்கா திரைப்படமும் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை தான் காமெடி கலந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருக்கு கடுக்கா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அறிமுக காட்சியிலேயே பஸ் ஸ்டாண்டில் பெண்களை கவர பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடக்கும் நாயகன் விஜய் கெளரிஷ், எந்த வேலைக்கும் செல்லாமல் அம்மாவின் உழைப்பில் வாழ்ந்து வருகிறார். காதலிக்க பெண் கிடைக்காமல் சுற்றும் அவரின் வீட்டுக்கு எதிரே புதிதாக குடிவருகிறார்கள் நாயகி ஸ்மேஹாவின் குடும்பம். அன்றில் இருந்து அவரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியும் காதலுக்கு ஓகே சொல்கிறார். அதே நேரத்தில் சுவர் விளம்பரம் வரையும் விஜய் கெளரிஷின் நண்பன் ஆதர்ஷும் அவரது தந்தையிடம் நெருக்கமான பழக்கம் கிடைக்க, ஸ்மேஹா வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரிடம் தன் காதலை சொல்கிறார். இவரின் காதலுக்கும் நாயகி ஓகே சொல்லி விடுகிறார். நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது இருவருக்கும் தெரிய வர, அதன் பின் என்ன ஆனது? நாயகி உண்மையில் யாரை காதலிக்கிறார்? இருவரையும் காதலிப்பதாக சொல்வது ஏன்? என்பதே கடுக்கா படத்தின் மீதிக்கதை.
நாயகன் விஜய் கெளரிஷ், அவரது நண்பர் ஆதர்ஷ் என இரண்டு பேருமேஅச்சு அசல் அந்த கிராமத்து மனிதர்களை பிரதிபலிக்கிறார்கள். துண்டு பீடி அடிப்பது, நண்பர்கள் கூடி சரக்கு அடிப்பது என அந்த ஊர் மனிதர்களாகவே இருக்கிறார்கள். பேச்சு வழக்கிலும் பாடி லாங்குவேஜிலும் ரசிக்க வைக்கிறார்கள். காதல் தொல்லை கொடுப்பது, போட்டி போட்டு காதலிப்பது, அதற்காக அடித்துக் கொள்வது என ரகளை செய்கிறார்கள்.
நாயகி ஸ்மேஹா பார்ப்பதற்கு விஜய் டிவி கேப்ரியல்லாவை ஞாபகப்படுத்துகிறார். இருவரிடமும் சிரித்து பேசுவது, கண்ணாலேயே பேசுவது, கோபப்படுவது என எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. நம் பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக இருந்ததும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா ஆகியோரும் கதைக்கு ஏற்ற முகங்களாய் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் கேட்க நன்றாகவே இருக்கிறது. சதிஷ்குமார் துரைகண்ணு ஒளிப்பதிவு மிக யதார்த்தம். அந்த கிராமத்தையும், கால்வாய், பஸ் ஸ்டாப், கிராமத்து தெருக்கள் என மிக இயல்பாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு, கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு கதைக்களத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் மோசமான படம் என்ற முத்திரை விழக்கூடிய படம். ஆனால் அதையே ரசிக்கும் விதத்தில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார். நடிகர், நடிகர்களை வேலை வாங்கிய விதமும் அருமை. ஆரம்பத்தில் கதை போகும் போக்கு கொஞ்சம் நெருடலையும், கேள்விகளையும் எழுப்பினாலும் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அந்த எண்ணத்தை மாற்றுகிறார். கிளைமாக்ஸ் அனைத்து கேள்விகளுக்கும் விடையாக அமைந்து நல்ல ஒரு படமாக மாறி நிற்கிறது. நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இந்த கடுக்கா.