கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் தயாரிக்க, அனுராக் கஷயாப் வழங்க, அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Tee Jay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “Bad Girl”. இளம் பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் கலந்து கொண்டு படக்குழுவை பற்றி பேசினர்.
நடிகை சரண்யா ரவிச்சந்திரன் பேசும்போது, “வர்ஷா வடசென்னைல உதவி இயக்குனரா இருந்தப்போ, நான் படம் பண்ணா கூப்பிடுறேன்னு சொன்னாங்க. ஆனாலும் 10 வருஷம் கழிச்சும் என்னை ஞாபகம் வச்சி எனக்கு செல்வி என்ற கதாபாத்திரம் கொடுத்த இயக்குனர் வர்ஷாவுக்கு நன்றி. இந்த படத்தில் தான் என்னை கொஞ்சம் மாடர்ன் பொண்ணா, அழகா காட்டிருக்காங்க. படம் பார்த்த நிறைய பேர் செல்வி மாதிரி ஒரு தோழி வேணும்னு சொன்னாங்க. இன்ஸ்டாகிராம்லயும் நிறைய ஃபாலோவர்ஸ் கிடைச்சிருக்காங்க” என்றார்.
நாயகி அஞ்சலி சிவராமன் பேசும்போது, “வெற்றிமாறன், இயக்குனர் வர்ஷா இல்லைனா இந்த நல்ல வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்காது. காதல், உறவுகள், நண்பர்கள் பற்றிப் பேசும் படம் இது. அமித் திரிவேதி இந்த படத்துக்கு அவரின் இசை மூலம் உயிர் கொடுத்துள்ளார். என் குடும்பத்தின் ஆதரவு இல்லைனா நான் இந்த இடத்துல இருக்க முடியாது” என்றார்.
இயக்குனர் வர்ஷா பரத் பேசும்போது, “ட்ரைலர் வெளியீட்டுக்கு பின் பல விஷயங்கள் அரங்கேறியிருக்கு. உலகம் முழுக்க நிறைய விழாக்களில் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. இங்க பேட் கேர்ள் குப்பை படம்னு ஒரு தரப்பு சொல்லிட்ருக்கப்போ, ரோட்டர்டாம் விழாவில் எங்கள் படம் திரையிடப்பட்டிருந்தது. எல்லா வகையான படங்களும் இந்த உலகத்துல வரணும். பெண்களுக்கு ஆசை இருப்பது தான் இங்க எல்லாருக்கும் பிரச்சினை. இந்த படத்தை ரொம்பவே சென்சிட்டிவாக அணுகியிருக்கிறோம். நாங்க கலாச்சாரத்தை சீரழிக்கிறோம்னு சிலர் சொல்றாங்க. கலாச்சாரம் தான் எங்களை காப்பாற்றணும், பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய தேவை இல்லை.
வெற்றிமாறன் சார் கிட்ட ஸ்கிரிப்ட் எப்படி எழுதணும்னு கத்துக்கிட்டேன், தனுஷ் சார்கிட்ட ஸ்கிரிப்ட் எப்படி முடிக்கணும்னு கத்துக்கிட்டேன். வெற்றிமாறன் எல்லாவற்றையும் விமர்சனக் கண்ணோடு தான் பார்ப்பார். அந்த நேரத்தில் அனுராக் கஷ்யாப் சார் தான் எங்களை தேற்றுவார். அமித் திரிவேதி இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். அஞ்சலி சிவராமன் மிகச்சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். சரண்யா நடித்த செல்வி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.
இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “முழுக்க ஆண்களால் ஆக்கிரமிக்கப்படும் மேடை இன்று முழுக்க பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை நான் பெருமையாக பார்க்கிறேன். ஒரு கலைப்படைப்பு சமூகத்தில் இருந்து தான் உருவாகிறது. ஒரு மோசமான கலைப்படைப்பு நம்மை கெடுக்கிறது, நல்ல ஒரு கலைப்படைப்பு நம்மை செதுக்குகிறது. 100 வருட சினிமாவில் எத்தனை நல்ல படங்கள் தேறும் என்பதை யோசிக்க வேண்டும். பெண்கள் சினிமாவுக்கு வரும்போது எனக்கு அவ்வளவு மக்ழிச்சியாக இருக்கும். அப்படி இந்த வர்ஷா வெற்றிமாறனிடம் வந்து சேர்ந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த படத்தின் இயக்குனர் இந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பதற்கு ஆதாரமாக சில விஷயங்ளை நான் பார்க்கிறேன். வெற்றிமாறன் நினைத்திருந்தால் பணத்திற்காக ஏதோ ஒரு படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் ஆன்மாவை தொடும் படத்தை தயாரித்திருக்கிறார். சமூகத்தை ஏமாற்ற இந்த வர்ஷா வரவில்லை. நிறைய சாக்கடைகள் படம் எடுக்கும் நேரத்தில் இந்த படம் ஒரு சந்தன கட்டை. இந்த படம் 50% பேருக்கு பிடிக்கும், 50% பேருக்கு பிடிக்காது. எங்கள் குழுவில் சிலர் படத்தை நேற்று பார்த்தோம். அதில் சிலருக்கு பிடித்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. அதில் ஒரு பெண் உதவி இயக்குனர், அவளுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.
வாடிவாசல் தமிழ் சினிமாவின் ஒரு கிளாசிக் புத்தகம். அதை படமாக வெற்றிமாறன் எடுக்க வேண்டும். எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் சரி, அதை களைந்து அந்த படத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, “இயக்குனராக இருப்பது ஒரு பெரிய சுதந்திரம், ஆனால் தயாரிப்பாளராக இருப்பது பெரிய அழுத்தமாக நினைக்கிறேன். இயக்குனர் வர்ஷா ஹைப்பர் மோட்டிவேட்டட். படம் பண்ணா என்னுடைய கம்பெனிக்கு பண்ணவே மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அது மாறி மாறி எங்க கம்பெனியில் படம் பண்ணுவதாக மாறியிருக்கிறது. இந்த படத்தில் உள்ள கிரியேட்டிவ் அம்சங்கள் எதிலுமே என் பங்கு இல்லை. எல்லாமே வர்ஷாவின் உழைப்பு தான்.
ஒவ்வொரு தலைமுறைக்குமான வாழ்க்கை அவர்களுடையது. எந்த தலைமுறையுமே அடுத்த தலைமுறையை ஜட்ஜ் செய்ய வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள். இந்த படமே ஒரு தாய் மற்றும் மகளுக்குமான தலைமறை இடைவெளி தான். அந்த இடைவெளியை அவர்கள் கடந்தார்களா? என்பது தான் இந்த படம் பேசும் முக்கிய அம்சம்.
படம் உருவாகிக் கொண்டிருந்தபோது அனுராக் காஷ்யப் முதல் பாதி படத்தை பார்த்தார். அவர் தான் அமித் திரிவேதி இந்த படத்துக்கு இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி, அமித்தை உள்ளே கொண்டு வந்தார்.
எங்களுடைய மனுஷி படம் ஏற்கனவே தணிக்கையில் மாட்டிக் கொண்டது, இப்போது பல போராட்டங்களுக்கு பிறகு ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்த படமும் சில சிக்கலில் இருந்தது, இப்போது U/A 16+ சான்றிதழ் பெற்றுள்ளது. சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பாதே சிரமமாக இருக்கிறது. இந்தச் சூழலில் பேட் கேர்ள் தான் எங்கள் கிராஸ்ரூட் கம்பெனியின் கடைசி படம். இனிமேல் படங்களை தயாரிக்கப் போவதில்லை. வாடிவாசல் படம் நடக்குமா? இல்லையா? என பெரிய விவாதமே போய்க் கொண்டிருக்கிறது. அது குறித்த அப்டேட் இன்னும் பத்து நாட்களில் வெளிவரும்” என்றார்.
இந்த விழாவில் பாவனா மோகன், ஸ்ருதி மஞ்சரி, கேபர் வாசுகி, பாடகி சுபலாஷினி, பிரின்ஸ், ஜகதீஷ், வர்ஷா வரதராஜன், விக்ரம், ராதா ஸ்ரீதர், ஹ்ருது ஹாரூன், சாந்தி பிரியா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.