ஆக்ஷன் கிங் அர்ஜூன், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருந்து. தாமரை கண்ணன் இயக்கியத்தில் நெய்யார் பிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரித்திருக்கிறார். அஜூ வர்கீஸ், கிரீஷ் நெய்யர், சோனா நாயர், ஹரீஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மிக முக்கிய சமூகத்தில் நிகழ்ந்து வரும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் மிக முக்கிய கருத்தையும் தாங்கி வந்திருக்கிறது. ரசிகர்களை கவருமா? நோக்கம் நிறைவேறுமா? பார்ப்போம்.
படத்தின் கதைப்படி, நாயகி நிக்கி கல்ராணியின் தந்தை பெரிய தொழில் அதிபர். தொழில் நஷ்டத்தில் இருந்து மீள முயற்சி எடுத்து வரும் வேளையில் மர்மமான முறையில் இறக்கிறார். இவரது மரணம் கொலையா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சில வாரங்களில் நிக்கி கல்ராணியின் தாயும் கார் விபத்தில் சிக்கி இறக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே ஒரு மர்ம கும்பல் நிக்கி கல்ராணியை துரத்த ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் உதவியுடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல, அங்கேயும் விடாமல் துரத்துகிறது கும்பல். இதற்கிடையில் அவர்களை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி தன் வீட்டில் தங்க வைக்கிறார் அர்ஜூன். ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணி, அர்ஜூனை கொலை செய்ய முயற்சி செய்கிறார். ஏன் அப்படி செய்தார்? நிக்கி கல்ராணியை துரத்தும் மர்ம கும்பல் யார்? எதற்காக துரத்துகிறார்கள்? நிக்கி கல்ராணி பெற்றோர் இறந்தது எப்படி? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன். வழக்கமான ஹீரோ என்று இல்லாமல் கதை மாந்தருக்கு உதவும் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நாயகி மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களை பாதுகாக்கும் ஒரு மிக முக்கிய பொறுப்பை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் அடிநாதமான அந்த விஷயங்களை கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனங்கள் மூலமாக மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
நாயகியாக நிக்கி கல்ராணி. அளவான யதார்த்தமான நடிப்பு. தன்னை சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்களை தெரிந்து கொள்ளா முடியாமல் குழப்பத்துடன் என்ன நினைக்கிறார் என்றே யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். இவருடன் பயணிக்கும் கிரிஷ் நெய்யர் யதார்த்தமாக நடிக்கிறார், ஆனாலும் இவர் கதாபாத்திரமும், அவரின் குடும்ப பின்னணியும் இந்த கதையில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு தெரிவதை தவிர்க்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கலாம். தயாரிப்பாளர் என்பதாலேயே இந்த சலுகையா? என நினைக்கும்படி இருக்கிறது அவரின் பாத்திரப் படைப்பு.
அஜூ வர்கீஸ் ஏனோ சில காட்சிகளில் வந்து போகிறார். பைஜூ சந்தோஷ் ஆக்ஷன் கிங்குக்கு அடுத்து அதிக பில்டப்புடன் மாஸ் காட்சிகளில் வந்து ஸ்கோர் செய்கிறார். ஹரீஷ் பெரடியின் கதாபாத்திரம் சற்றே யூகிக்க முடியாதது. கொஞ்சம் அந்நியமாக பட்டாலும் கதையின் மிக முக்கிய திருப்புமுனை கதாபாத்திரம்.
ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் இசையில் பாடல்கள் கேட்கும் விதத்தில் இருக்கின்றன. பின்னணி இசையில் பல இடங்களில் மிரட்டலாகவே இருக்கிறது. ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காடு சார்ந்த இடங்கள் மற்றும் மலைப்பிரதேச காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
என்ன தான் மலையாளத்தில் எடுத்து அதை தமிழில் டப் செய்திருந்தாலும் மலையாள பூமியில் நடக்கும் கதையாகவே காட்டி, வெறும் வசனங்களை மட்டும் மாற்றியிருந்தால் இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்திருக்கும். கத்திப்பாரா, மடிப்பாக்கம், மதுரை, ஏற்காடு என தமிழுக்காக அவர்கள் ஊர்ப்பெயர்களை அவர்கள் மாற்றியிருப்பது கதையுடன் ஒன்ற முடியாமல் செய்து விடுகிறது.
அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள், இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் வேறு ரூட் எடுக்கிறது. திரைக்கதையில் கதையின் முக்கிய விஷயத்தை கடைசி வரை சொல்லாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக கிளைமாக்ஸ் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு ஒரு ட்விஸ்டை வைத்திருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.