தெறிக்க விட்ட தளபதி விஜய்யின் GOAT ட்ரைலர்!

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘கோட்’, தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். அதிரடி ஆக்ஷன் படமான இதில் தளபதி விஜய் உடன் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா முதல்முறையாக நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது இன்னும் அதிகரித்துள்ளது.

பிரபல நட்சத்திரங்களான மோகன், அஜ்மல் அமீர், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், வி டி வி கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “தளபதி விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழுவினருடன் இணைந்து ‘கோட்’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பெருமிதம் அடைகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகளின் ஒரு சிறு துளியே ஆகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதே மகிழ்ச்சியை ‘கோட்’ படத்தை திரையில் காணும் போது ரசிகர்களும் அடைவார்கள் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.

‘கோட்’ திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, “இது கற்பனை கதை என்ற போதிலும் உண்மைக்கு நெருக்கமாக ‘கோட்’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்திய உலக அமைப்பாளர் ரா-வின் ஒரு பிரிவான தீவிரவாத எதிர்ப்பு படையில் விஜய் மற்றும் அவரது குழுவினர் பணியாற்றுகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் செய்த செயல் ஒன்று தற்போது ஒரு பிரச்சினையாக வெடிக்கிறது. விஜய்யும் அவரது குழுவினரும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. நான்கு ரா அதிகாரிகளை சுற்றி நடக்கும் இந்த கதை சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளோடு உருவாகியுள்ளது. விஜய்யின் அதிரடி நடிப்பு திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்,” என்று கூறினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். ஐமேக்ஸ் வடிவத்தில் செப்டம்பர் 5 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகெங்கும் ‘கோட்’ திரைப்படம் வெளியாகிறது.

Trailer Link:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *