கன்னி மாடம் படத்தின் மூலம் இயக்குனராகவும் கவனம் ஈர்த்த நடிகர் போஸ் வெங்கட் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் “சார்”. முதலில் மா.பொ.சி என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு உருவான இந்த படம் முடியும் தருவாயில் சார் என்று மாற்றப்பட்டது. விமல் நாயகனாக நடித்திருக்கும் இந்த படம் கல்வியின் அவசியத்தையும், பல தடைகளை தாண்டி எப்படி எளிய மக்களுக்கும் கல்வி சென்றடைந்தது என்பதை பற்றி மிக விரிவாக பேசியிருக்கிறது. அந்த கருத்து மக்களை சென்றடையுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று நினைக்கும் அண்ணாதுரை கிராமத்தில் பள்ளி ஒன்றை கட்டுகிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியை தந்து காலகாலமாக அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். கல்வி அறிவை பெற்றால் அவர்களை அடிமைப்படுத்த முடியாது என நினைக்கும் அந்த ஊரில் உயர்சாதி புள்ளிகள் அந்த பள்ளியை அழிப்பதற்கு பல சதிவேலைகளை செய்கிறார்கள். அண்ணாதுரை போய் அவர் மகன் அரசன் வர, அவர் போய் அவர் மகன் ஞானம் வர ஆனாலும் இந்த பிரச்சனை தலைமுறை தாண்டியும் தொடர்கிறது. அதே போல அடக்குமுறை செய்யும் உயர்சாதி பெருமையில் இருப்பவர்களும் அடுத்தடுத்த தலைமுறையிலும் கல்வியை சென்று சேராமல் தடுக்க முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்களின் சதியால் அரசனுக்கு பைத்தியக்கார பட்டம் கிடைக்கிறது. அடுத்து அவர் மகன் ஞானம் மேல்நிலைப் பள்ளி ஆக்கும் முயற்சியில் இருக்க அவர் மீதும் பல சதிவலை பின்னப்படுகிறது. அவற்றிலிருந்து மீண்டு எப்படி தன் அப்பா, தாத்தாவின் நோக்கத்தை நிறைவேற்றினார் என்பதே மீதுக்கதை.
வாகை சூட வா படத்திற்கு பின் மற்றொரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விமல். அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஞானம் என்ற ஆசிரியர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் நடித்திருக்கிறார். ஆனாலும் படத்தின் இறுதி காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். துரோகம், இயலாமை, ரௌத்திரம் என பல காட்சிகளில் தன் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் வந்து போகும் நாயகி சாயா தேவி, ஒரு முக்கியமான காட்சியில் நம் மனதில் பதிகிறார்.
விமலின் தந்தையாக சரவணன். நாயகனுக்கு இணையான, நாயகனுக்கு முன் மாதிரியான ஒரு கதாபாத்திரம். தன் சிறப்பான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். சங்கிலியால் கட்டி வைக்கப்படும் காட்சிகளில் நம்மை கண் கலங்க வைக்கிறார். சாதி வெறியில் சூழ்ச்சியுடன் நல்லவனாக நடித்து கவிழ்க்கும் வில்லன் வேடத்தில் சிராஜ், நல்ல சாய்ஸ். புதுமுக நடிகர் என்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ரமா, வஐசெ ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, ஆர்.கே.விஜய் முருகன் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
அண்ணாதுரை, அரசன், ஞானம் என மூன்று மனிதர்களின் கால கட்டங்களில் நடக்கும் கதையை காலத்துக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ். சித்து குமார் இசையில் பாடல்கள் இனிமை. இரைச்சல் இன்றி பாடல் வரிகள் தெளிவாக கேட்கும்படி தந்ததற்கே பாராட்டுக்கள்.
இயக்குனர் போஸ் வெங்கட் நல்ல ஒரு சமூகக் கருத்தை கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் படமாக இந்த படத்தை கொடுத்ததற்கே அவருக்கு பாராட்டுக்கள். எளிய மக்களை அடிமையாகவே வைத்திருந்து அதன் மூலம் தங்களின் அதிகாரத்தை காட்ட நினைப்பவர்களுக்கு போஸ் வெங்கட் தந்திருக்கும் சவுக்கடி தான் இந்த படம். கல்வியால் மட்டுமே மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை களைய முடியும் என்ற கருத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார். கன்னி மாடம் பலரால் கவனிக்கப்படாமல் போனது, இந்த படம் நிச்சயம் பலரும் பார்த்து பல விஷயங்களை பேச வேண்டும் என்பது நம் கருத்து. இயக்குநர் போஸ் வெங்கட் மீண்டும் ஒரு முறை தான் ஒரு சமூகப் பொறுப்பு மிக்க கலைஞன் என்பதை காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்.