வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்க, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் ‘PT சார்’. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் 25வது படம் என்ற சிறப்புடன் வெளியாகியுள்ள இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அரண்மனை 4 வெற்றிக்களிப்பில் உள்ள ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த படமும் வெற்றியை கொடுக்குமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, GP Group of institutions என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கல்வி தந்தை தியாகராஜன். அந்த பள்ளியில் பிடி ஆசிரியராக ஆதியும், ஆங்கில ஆசிரியையாக நாயகி காஷ்மீராவும் பணி புரிந்து வருகிறார்கள். ஆதி ஜாதகப்படி அவரை எந்த பிரச்சினைக்கும் போகாதவராக, பயந்தவராகவே வளர்க்கிறார் அவர் அம்மா தேவதர்ஷினி. ஆதிக்கு நாயகி மீது காதல், நாயகியும் ஆதியை காதலிக்கிறார். அந்த பள்ளிக்கு அருகிலேயே அதே GP குரூப்பின் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார் அனிகா சுரேந்திரன். ஒரு நாள் காலேஜ் கல்ச்சுரல் முடிந்து வரும்போது சில இளைஞர்கள் அவரை பாலியல் சீண்டல் செய்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் பரவி, அவர் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறது. அதை கடந்து தைரியமாக இயல்பாக இருக்க நினைக்கும் அனிகாவின் தன்னம்பிக்கையை சுற்றி உள்ள அனைவருமே உடைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆற்றுப் பாலத்தில் இருந்து அனிகா தற்கொலை செய்து கொள்கிறார், அது தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடுக்கிறார்கள் ஆதியும், அனிகாவின் தந்தை இளவரசுவும். தன் பயத்தை உடைத்தெறிந்து பொது பிரச்சினையை தட்டிக் கேட்டாரா ஆதி? அனிகா விஷயத்தில் நியாயம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, முதல் பாதி முழுக்க கலகலவென பிடி வாத்தியாராக, காதல் செய்யும் இளைஞராக, சிறுவர்களுடன் சேர்ந்து ரகளை செய்கிறார். இரண்டாம் பாதியில் அப்படியே வேறு ஒருவராக மாறுகிறார். அதிரடி காட்டுகிறார். ஆக்ஷன் செய்கிறார். சட்டத்தையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளும் கல்வித் தந்தையை எதிர்க்கிறார். பாடல்களில் வழக்கம் போல குறும்புத்தனத்துடன் ரசிக்க வைக்கிறார். எமோஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகியாக காஷ்மீரா ஒரு சப்போர்டிங் கேரக்டராக தன் வேலையை செய்து விட்டு போகிறார். மையக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அனிகா சுரேந்திரன் உடையது. கல்லூரி மாணவியாக, பாலியல் சீண்டலுக்கு உள்ளானவராக எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஒரு மாணவியாக சிறப்பாகவே நடித்துள்ளார். தியாகராஜன் கல்வித்தந்தையாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் பயமுறுத்தும் ஒரு ஆளுமையுடன் சிறப்பாக நடித்துள்ளார். அவர் வந்து நின்றாலே போது, கச்சிதமாக இருக்கிறார். பிரபு நாயகியின் அப்பாவாக, ஒரு வழக்கறிஞராக படத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்.
ஆதியின் பெற்றோராக பட்ட்மன்றம் ராஜா, தேவதர்ஷினி, அனிகாவின் தந்தையாக மகளை பறிகொடுத்த வேதனையுடன் இருக்கும் இளவரசு, வினோதினி வைத்யநாதன், பள்ளியின் பிரின்ஸிபாலாக பாண்டியராஜன், அறிவியல் ஆசிரியராக முனீஷ்காந்த், ஆதியின் தங்கையாக பரணிகா தக்ஷூ, அனிகாவின் தங்கையாக ‘அயலி’ அபி நக்ஷ்த்ரா, நக்கலைட்ஸ் நட்சத்திரங்கள், சுட்டி அரவிந்த் என அவரவர் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
எங்கு திரும்பினாலும் கூட்டம், பள்ளி, கோர்ட்டு, தெருக்கள் என மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் அவை அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துள்ளார். பிரசன்னா எடிட்டிங்கும் சிறப்பு, ட்ரான்சிஷன்ஸை கட் செய்த விதம் பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா 25வது படம், குட்டிப்பிசாசே, நக்கல் புடிச்சவன் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் தன் முத்திரையை பதித்துள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளிலும், கோர்ட் காட்சியில் முக்கியமான இடத்தில் வரும் இசையும் அருமை.
கார்த்திக் வேணுகோபாலன் முதல் படத்தில் சுமாராக இருந்தாலும் இறுதி காட்சிகளில் ஒரு நல்ல ஒரு மெசேஜ் உடன் படத்தை முடித்து ஸ்கோர் செய்திருப்பார். இந்த படத்தில் அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம் பழசு தான் என்றாலும், அதை திரைக்கதையில் மெறுகேற்ற முயற்சி செய்திருக்கிறார். நடித்த நடிகர்கள் அதை இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி இருக்கிறார்கள். பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும், மக்கள் மனதில் நிலவும் சில பிற்போக்குத் தனமான சிந்தனைகளையும் காட்சிகளாக கொண்டு வந்த விதம் நன்று. கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். ஆனாலும் அதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் இயக்குனரின் வெற்றி தான் அது. பொழுதுபொக்கு அம்சங்கள் குறைவாகவும், சமூக கருத்துக்கள் நிறைவாகவும் உள்ள படமாக முடிகிறது பிடி சார். குடும்பத்துடன் பார்க்கலாம்.