ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.
நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா பேசும்போது, “இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம்” என்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசும்போது, “‘பறந்து போ’ எனத் தலைப்பு வைத்ததற்கே இயக்குநர் ராமை பாராட்ட வேண்டும். ஏனெனில் எல்லோரும் பறப்பதற்கு பயப்படும் காலம் இது. சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். சிவா அருமையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளை ரசித்து பார்த்தேன். வயல்ன்ஸ் படங்களுக்கு மத்தியில் குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும்படி இந்தப் படம் வந்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் அன்பை பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசும்போது, “ராமுடைய எல்லாப் படங்களும் நமக்கு எதாவது ஒரு விஷயம் உணர்த்தும். அதுபோல, ‘பறந்து போ’ வேறொரு உலகத்தை நமக்குக் காட்டும். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என மனதார விரும்புகிறேன்” என்றார்.
மருத்துவர் கு. சிவராமன் பேசும்போது, “சில ஜப்பானிய படங்களைப் பார்க்கும்போது நம் ஊரிலும் அதேபோன்று படங்கள் வராதா என ஏங்கியதுண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக இந்தப் படம் வந்திருக்கிறது. ராமின் எல்லா படங்களும் நமக்கு நெருக்கமானது. ஒரு நல்ல கதை நமக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல, ‘பறந்து போ’ படமும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
நடிகர் சித்தார்த் பேசும்போது, “ராமுடைய எல்லா படங்களும் என்னுடைய படங்கள் தான். எங்கள் இருவருடைய படங்களும் ஒரே நாளில் வருகிறது. ராமின் இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். நடிகர் சிவா உள்ளே வந்ததால் அது சாத்தியமாகி இருக்கிறது. அஞ்சலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள குழந்தைகள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.
பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் பேசும்போது, “அவசர உலகில் நம் காதருகில் வந்து ஒரு குரல் ஆறுதலாக ‘வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கஷ்டமல்ல’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியான படம்தான் ‘பறந்து போ’. ஜென் Z தலைமுறைக்கும் அவர்களை புரிந்து கொள்ள போராடும் பெற்றோருக்கும் இடையேயான உறவை அழகாக இந்தப் படம் சொல்லியிருக்கிறது. நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமான பரிசாக இந்த படம் அமையும்” என்றார்.
‘நீயா நானா’ கோபிநாத் பேசும்போது, “ராம் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கும். ‘பறந்து போ’ நமக்குள் இருக்கும் பல ஈகோவை உடைக்கும். இந்த காலத்திற்கு அவசியமான படம். திரையரங்குகளில் பலருடன் சேர்ந்து பார்க்க வேண்டும். வருடத்திற்கு ஒரு படமாவது ராம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்” என்றார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, “சிவா இதற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க புதிதாக இருந்தது. அஞ்சலியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ராமின் படங்கள் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவை. ராமை பார்த்து பலரும் பயப்படுவார்கள். ஆனால், அவரின் மறுப்பக்கம் வெகுளியானத்ய். அதை இந்தப் படத்தில் பார்க்கலாம்” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ” ராமின் கதையை யாருடனும் ஒப்பிடத் தேவைப்படாத ஒரு கதையை எப்போதும் வைத்திருப்பார். நம் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். சமரசம் இல்லாத நல்ல படத்தைக் கொடுக்கும் ராமுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது, “ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான ஒரு இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ” ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப்! சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ‘ என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது’ என்றார். ‘தங்கமீன்கள்’ படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “இந்தப் படத்தில் என்னுடைய ஆயிரமாவது பாடலை எழுதி இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஹ்மான் முன்னிலையின் இந்தப் பாடலை வெளியிட நினைத்தேன். ஆனால், அவர்களின் வெவ்வேறு கமிட்மெண்ட்டால் வர முடியவில்லை. என்னுடைய முதல் பாடலான ‘இரும்பிலே ஓர் இருதயம்…’ பாடலை எனது மனைவி தான் படித்துவிட்டு வாழ்த்தினார். அதனால், அவருடன் இந்த நிகழ்வு நடப்பதுதான் சரியானது. என்னுடைய மகனும் வந்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால் தான் எங்களுக்கு வெற்றி. படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.
நடிகை அஞ்சலி பேசும்போது, “சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு ‘பறந்து போ’ அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் ‘பறந்து போ'” என்றார்.