2019ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் படத்தை தொடர்ந்து வெளியாகும் அடுத்த படம் தான் “முஃபாஸா – தி லயன் கிங்”. லயன் கிங் படத்தின் prequel கதையாக, சிம்பாவின் தந்தை முஃபாஸாவின் இளமைக்கால கதையை, முஃபாஸா எப்படி அரியணை ஏறுகிறார் என்பதை பற்றி சொல்லும் படம் தான் இந்த முஃபாஸா.
படத்தின் கதைப்படி, டிமோன் மற்றும் பும்பா ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிம்பாவின் மகளான குட்டி சிங்கக் குட்டி கியாராவிடம் ரஃபிகி முஃபாஸாவின் கதையை சொல்கிறது. முஃபாஸா தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது. ஒரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனாதையாகிறது. வேறு ஒரு நிலப்பகுதியில் ஒரு அரச பரம்பரையின் வாரிசாக இருக்கும் டாக்கா என்ற இரக்கமுள்ள சிங்கக் குட்டியை சந்திக்கிறது. அவரின் பெற்றோர் ஆதரவுடன் வளரும் முஃபாஸா, தைரியத்தை கற்றுக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் டாகாவின் அம்மாவை காப்பாற்றப் போகும்போது ஒரு சிங்கத்தை கொல்ல, அதற்கு பழி வாங்க வருகிறது அவுட்சைடர்ஸ் என்று அழைக்கப்படும் வெள்ளை சிங்கக் கூட்டம். அவர்களிடம் இருந்து டாகாவையும், முஃபாஸாவையும் காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த பயணத்தில் முஃபாஸா, டாகா உடன் ரஃபிகி, சரபி ஆகியோரும் இணைந்து கொள்ள, மிலிலே நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த இடத்தை சென்றடைந்தார்களா? வழியில் ஏற்பட்ட தடைகள் என்ன? அதை எப்படி முஃபாஸா எதிர் கொள்கிறது? என்பதை காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் என பல அம்சங்களை கலந்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த முஃபாஸா.
முந்தைய லயன் கிங் படத்தை போலவே இந்த படத்திலும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய படமாக உருவாகியிருக்கிறது. டிஸ்னியின் தொழில்நுட்ப அம்சங்கள் எப்போதும் போலவே மிகச்சிறப்பாக இருக்கிறது. மற்றபடி முழுக்க முழுக்க கதாபாத்திரங்களும் திரைக்கதையும் பற்றி மட்டுமே அலச வேண்டி இருக்கிறது.
தமிழ் டப்பிங்கில் முஃபாஸாவாவுக்கு அர்ஜூன் தாஸ், டாகாவுக்கு அசோக் செல்வன், கிரோஸ்க்கு நாசர், பும்பா, டிமோன் மற்றும் ரஃபிகிக்கு சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் என பல பிரபலங்கள் மிகச்சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அவ்வப்போது சிங்கம் புலி, ரோபோ சங்கர் அடிக்கும் கவுண்டர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. காப்பிரைட், கேமியோ என அவர்கள் அடிக்கும் கவுண்டர்கள் செம்ம கலாய்.
ஆங்காங்கே வரும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் மிகவும் பிரமாதம். ஒரு அனிமேஷன் படத்தில் காதல், நட்பு, துரோகம், பழி வாங்குதல் என பல உணர்வுகளை கலந்த கலவையாக கொடுத்திருக்கிறார்கள். முந்தைய லயன் கிங் படத்தை ஒப்பிடாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.