யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காலம் இது. தற்போது லேட்டஸ்டாக இந்த வார எண்ட்ரி தான் ஹரி பாஸ்கர். அவர் நடிப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் போன்ற பாரம்பரிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “Mr ஹவுஸ் கீப்பிங்”. பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் ரயான் நடிக்க இளைஞர்களை குறி வைத்து வெளியாகிள்ள ஒரு ரொமாண்டிக் காமெடி படம் தான் இது. இளைஞர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கல்லூரியில் 4 ஆண்டுகள் லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ஹரி பாஸ்கர். ஆனால் லாஸ்லியா அந்த காதலை ஏற்க மறுக்கிறார். அந்த கோபத்தில் கடைசி நாளில் இன்னும் 4 ஆண்டுகளில் நல்ல ஒரு பெண்ணை காதலித்து வாழ்க்கையிலும், நல்ல காசு சம்பாதித்து பணக்காரனாகவும் செட்டில் ஆவேன் என சவால் விடுகிறார். 4 ஆண்டுகள் கழித்தும் வேலைக்கு செல்லாமல் சுற்றும் ஹரி பாஸ்கர் ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு திருமணமாக சோகமாகிறார். உடனடி பணத்தேவைக்காக ஒரு கட்டத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகிறார் ஹரி பாஸ்கர். செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அவர் வேலைக்கு செல்லும் வீட்டின் ஓனரே லாஸ்லியா தான். அவமானத்தை தாங்கிக் கொண்டு சவால் விட்ட காதலியின் வீட்டிலேயே வேலை செய்ய ஆரம்பிக்கிறார். 6 மாதங்கள் வேலை செய்ய, அதற்குள் அவர்களிடையேயான உறவு எப்படி இருந்தது? காதல் பூத்ததா? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
ஜம்ப் கட்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. படம் முழுக்க தன்னுடைய இயல்பான நடிப்பாலும், காமெடி மூலமும் படத்தை ரசிக்க வைக்கிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் வரும் மொட்டை மாடி காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார்.
பிக் பாஸ் லாஸ்லியா தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஐடி பெண்ணுக்கான தோற்றம், நடை உடை பாவனை என மாடர்ன் பெண்ணாக சுற்றினாலும் ஒரு கட்டத்தில் சாதாரண பெண்ணுக்கு உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம், செவ்வனே செய்திருக்கிறார்.
பிக் பாஸ் ரயான் வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. இவர்கள் மூவருக்கும் இடையிலான காட்சிகளில் படம் அடுத்த கட்டத்துக்கு போகிறது. இளவரசு நல்ல ஒரு அன்பான, கண்டிப்பான தந்தையாக மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஷாரா வரும் காட்சிகள் எல்லாம் அல்ட்ரா ரகளை.
ஓஷோ வெங்கட்டின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். தமன், அனிருத் ஒரு சில இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட வந்து போகிறார் அவரது இசையில். பாடல்களை போலவே பின்னணி இசையும் அசத்தல். குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு படத்தை இன்னும் இளமையாக்குகிறது, படத்தை இன்னும் கலர்ஃபுல்லாக ரசிக்க வைக்கிறது.
அறிமுக இயக்குனர் அருண் ரவிச்சந்திரன், நல்ல ஒரு கலகலப்பான இன்றைய இளைஞர்களை குறி வைக்கும் ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளார். ஆனாலும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படமாகவும் இருக்கும். காமெடி, காதல், குடும்பம், எமோஷன்ஸ் என எல்லாமே சரியான மீட்டரில் கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதையும் நமக்கு போர் அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. ஆனாலும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் ஓடிடியை விட ஆடியன்ஸூடன் ரகளையாக தியேட்டரில் சென்று ரசிக்கலாம் இந்த Mr.ஹவுஸ் கீப்பிங்.