ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் டியர். ரிலீஸூக்கு முன்பு கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்று தான் என சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்தது. இரு படங்களின் இயக்குனர்களும் அதை பற்றி பெரிதாக பிரச்சினையாக பேசவும் இல்லை. படமும் வெளியாகி விட்டது, இதுவும் அந்த படம் போல கதையில் உள்ளதா? அல்லது குட் நைட் போலவே நல்ல படம் என்ற பட்டியலில் உள்ளதா? பார்ப்போம்.
கதைப்படி, நாயகன் GV பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிகிறார். இவர் ஒரு லைட் ஸ்லீப்பர். அதாவது தூங்கும் போது ஒரு சின்ன சத்தம் கேட்டால் கூட, அவ்வளவு ஏன் கனவில் ஒரு சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுபவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அதை காரணமாக வைத்தே பல திருமண வரன்கள் தட்டிப் போகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் திருமணம் நடக்க, திருமணத்திற்கு பிறகு பெரும் பிரச்சினையே வெடிக்க, ஜி.வி.பிரகாஷுக்கு வேலை போக, ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்க, அவர் விவாகரத்து தர மறுக்க, இறுதியில் ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து பெற்றாரா? அல்லது இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் வழக்கமான பக்கத்து வீட்டு இளைஞர் போன்ற கதாபாத்திரத்தில் நம்மில் ஒருவராக நல்ல ஒரு யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடி காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். தூங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், இன்னுமொரு வித்தியாசமான கண்ணியமான, நடிப்பில் வித்தியாசம் காட்டும் ஒரு கதாபாத்திரம். தன் பிரச்சினைகளை அம்மாவிடம் சொல்வது, அட்வைஸ் கேட்பது, பின் கணவருக்காக ஏங்குவது, பின் ஒரு கட்டத்தில் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
இளவரசு, காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், பிளாக் ஷீப் நந்தினி ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஓகே ரகம், தான் நடிக்கும் படங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இசையமைத்தால் அதுவே அவருக்கு கூடுதல் பலமாகவும் அமைந்திருக்கலாம். பின்னணி இசையில் ஆங்காங்கே பளிச்சிடுகிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும், ஊட்டி போன்ற இயற்கை பிரதேசங்களை அழகாக காட்டவும் செய்திருக்கிறது.
குட் நைட் போலவே குறட்டை பிரச்சினையை மையமாக வைத்த இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இதில் கூடுதலாக லைட் ஸ்லீப்பர் என்ற விஷயத்தையும் சொருகியிருக்கிறார். அது படத்துக்கு கொஞ்சம் வித்தியாசம் சேர்க்கிறது. திரைக்கதை மற்றும் ட்ரீட்மெண்டில் வித்தியாசம் காட்டினாலும் படம் பார்க்கும் போது இரு படங்களையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் கணவன், மனைவி பிரச்சனையையும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியை பெற்றே விட்டார் என்றும் சொல்லலாம்.