தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்கள் வருவதே அரிதாக இருந்த் காலகட்டத்தில் கதைப் போக்கிலேயே நல்ல காமெடியை கொண்ட ரொமாண்டிக் காமெடி படங்களை இயக்கி ரசிகர்களை கொண்டாட வைத்தவர் இயக்குனர் ராஜேஷ்.எம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அவர், அடுத்தடுத்து இயக்கிய படங்கள் பெரும் வெற்றியை பெற தவறி விட்டன. இந்த நிலையில் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிரதர்”. ஜெயம்’ ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக கொண்ட இந்த படம் ராஜேஷை பழைய ஃபார்முக்கு திருப்பியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஜெயம் ரவி, அவரது கண்ணில் படும் அநியாயங்களையும் எல்லா வழிகளிலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காதவர். அவரது அப்பா அச்யுத் குமார் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். ஜெயம் ரவியின் இத்தகைய செயல்களால் அவரது அப்பா பல இன்னல்களை சந்திக்கிறார். தன் மகனை திருத்துவதற்கு இருக்கும் ஒரே ஒரு கடைசி வாய்ப்பாக அவரை ஜெயம் ரவியின் அக்கா பூமிகா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு இருந்தால் அவன் மாற வாய்ப்பு உண்டு என்றும் நினைக்கிறார். ஜெயம் ரவியை மாற்றும் முயற்சியில் பூமிகா கணவர் நட்டியுடன் மோதல் ஏற்பட, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். ஜெயம் ரவி மாறினாரா? பூமிகா அவரது கணருடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவி சமீபத்தில் நடித்த படங்களில் எல்லாமே சீரியஸான கதாபாத்திரங்கள். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் துருதுருவென ஜாலியான கதாபாத்திரத்தில் ரகளை செய்திருக்கிறார். காதல் காட்சி, பாடல் காட்சி, எமோஷன் காட்சிகள் என பட்டைய கிளப்பியிருக்கிறார்.
பிரியங்க அருள்மோகன் நாயகியாக நல்ல கெமிஸ்ட்ரி. அவரை விட அக்காவாக வரும் பூமிகா, ஜெயம் ரவி காட்சிகள் தான் படத்தின் முக்கிய அம்சம். பூமிகாவும் மிக அற்புதமான நடிப்பின் மூலம் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார். அவரது கணவராக வரும் நட்டி வழக்கம் போல தன்னுடைய அசத்தலான நடிப்பால் நம்மை ஈர்க்கிறார். சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா, விடிவி கணேஷ் என மற்ற நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
விவேக் ஒளிப்பதிவில் மலைப்பிரதேசங்களின் அழகையும், நகரின் காட்சிகளையும் மிக அழகாக நமக்கு காட்டியிருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் படத்தின் அடையாளமாகவே மாறிப்போய் இருக்கிறார். மக்காமிஷி பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை தியேட்டரில் கொண்டாடுகிறார்கள்.
அக்கா தம்பி பாசத்தை குடும்ப உறவுகளை வைத்து ஒரு நல்ல குடும்பப் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். ஒரு எளிமையான கதை தான், ஆனாலும் முந்தைய படங்களை போல காமெடி காட்சிகள் எல்லாம் இல்லாதது ஒரு குறை. சந்தானம் போன்ற தேர்ந்த நகைச்சுவை நடிகர்கள் இயக்குனர் எவ்வளவு தேவை என்பது இந்த படத்திலும் புரிகிறது. படத்தில் அடுத்து வரும் காட்சி என்ன என்பதை அப்படியே சொல்லி விடும் அளவுக்கு அனைத்து காட்சிகளும் யூகிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது. பழைய பாணியில் இவர் தான் ஹீரோ என்று கதை சொல்வதை இன்னும் இயக்குனர் அப்படியே கடைபிடிப்பதை தவிர்த்திருக்கலாம். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற பாடல் வைத்தது அருமை, திரைக்கதையும், கதை சொல்லலும் அதே போல இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இந்த பிரதர்.