மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக, மிகப்பெரும் பௌர்ட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அஜயண்டே ரெண்டாம் மோஷனம்”, அதாவது தமிழில் “அஜயனின் ரெண்டாம் திருட்டு”. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் இந்த கதையை ஒரு புள்ளியில் இணைக்கும் விஷயம் ஒன்று உண்டு. அதை கையாண்டிருக்கும் விதம் எப்படி? பிரமாண்ட படத்தின் மூலம் டொவினோ தாமஸ் பிரமாண்ட வெற்றியை அடைந்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, முன்னொரு காலத்தில் ஒரு விண்கல் வந்து விழ, அதில் இருந்து கிடைத்த உலோகத்தை எடுத்து ஒரு சிலையை செய்கிறார் ஒரு அரசர். அந்த சிலையை பிராதான கதாபாத்திரமாக நடக்கும் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இந்த கதையில் 190’களில் நடக்கும் கதையில் அரசாங்க பணிக்காக தேர்வு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கும் அஜயன் (டோவினோ தாமஸ்). அவரது தாத்தா மணியன் (டொவினோ தாமஸ்), ஊர் கோவிலில் இருக்கும் பழம்பெரும் அதிசய விளக்கை திருட முயன்றதால், அவரையும் ஊர் மக்கள் திருடனின் பேரன் என சொல்லி சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அஜயனோ திருட்டை வெறுக்கும் ஒருவன். இதற்கிடையே, ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ல சில சூழ்ச்சிகளையும் செய்கிறார். அந்த சூழ்ச்சிகளில் இருந்து டொவினோ தப்பினாரா? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
நாயகன் டொவினோ தாமஸ். மூன்று வேறு வேறு கதாபாத்திரங்களில் காதல், அப்பாவித்தனம், மூர்க்கத்தனம், அவமானத்தை சகித்துக் கொண்டு வாழ்தல் என அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆக்ரோஷமான மணியன் கதாபாத்திரம், அவமானத்தில் கூனிக்குறுகும் அஜயன் கதாபாத்திரம், வீரம் நிறைந்த கேளு கதாபாத்திரம் என மூன்று வித்தியாசமான பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிகளாக கிரிதி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தாலும் கிரித்தி ஷெட்டிக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் திரையில் தோன்றும் வாய்ப்பு. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் எதற்கு? என்ன முக்கியத்துவம் இருக்கிறது? என யோசிக்க வைக்கிறது. பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் சிறப்பம்சம். காலகட்டங்களை அழகாக வேறுபடுத்தி காட்டுகிறது. படத்தொகுப்புக்கும் நிச்சயம் பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும். விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகள் பலம் சேர்க்கிறது. களரி சண்டைக்காட்சி நல்ல ஒரு தியேட்டர் அனுபவத்தை தருகிறது.
அறிமுக இயக்குநர் ஜிதின் லால், ஒரு சிலையை மையப்படுத்திய கதையை இரண்டரை மணி நேரம் ரசிகர்களை தனது மேக்கிங் மற்றும் கடும் உழைப்பால் சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார். முதல் காட்சியிலேயே கதைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறார். படத்தில் அவர் பேசியிருக்கும் சமத்துவ அரசியல் மொழி எல்லைகளை கடந்து அனைத்து மக்களும் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது. கருத்து சொன்னாலும் பொழுதுபோக்கு படமாகவும் சிறப்பான படமாகவே அமைந்திருக்கிறது இந்த ஏ.ஆர்.எம்.