உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படம் இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். அவர் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்த் காதலையும், ராணிவத்தில் மேஜர் முகுந்த் பணியாற்றிய முக்கிய ஆபரேஷன்ஸையும் மையமாக வைத்து உருவாக்கியுள்ளது.
படத்தின் கதைப்படி, சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் இருக்கிறார் முகுந்த். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை சந்திக்க, இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். ஒரு பக்கம் காதல், மறுபக்கம் இராணுவத்தில் சேரும் முனைப்பு. முகுந்த் அம்மாவுக்கு மகன் ராணுவத்தில் சேருவது வருத்தமாகவே இருக்கிறது. SSB Exam எழுதி தேர்வாகி, இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு, ராணுவத்தில் பணியமர்கிறார். இந்துவின் வீட்டில் ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் ஒரு கட்டத்தில் கிரீன் சிக்னல் கிடைக்கிறது. இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் – இந்துவின் திருமணம் நடைபெறுகிறது. ராணுவத்தில் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கும் முகுந்த், காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களை உண்மைக்கு மிக அருகில் யதார்த்தமாக காட்டியிருக்கும் படமே இந்த அமரன்.
மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தன்னை பொருத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரால் இந்த கதாபாத்திரத்தை செய்ய முடியுமா என சந்தேகப்பட்டவர்களைக் கூட இவர் தான் பொருத்தமான தேர்வு என சொல்ல வைக்கிறார். கல்லூரி , காதல் காட்சிகளில் இளைஞராக, ராணுவத்தில் சேர்ந்த பின் பொறுப்புள்ள தேசப்பற்றுள்ள இளைஞராக கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உடல் மற்றும் மனரீதியிலான மாற்றங்களை காட்டி வியக்க வைக்கிறார். பல காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.
மேஜர் முகுந்த் மனைவியாக இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவது அழகு. மேஜர் முகுந்த் அம்மாவாக கீதா கைலாசம், சாய் பல்லவி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அப்பா, சகோதரிகள், சாய் பல்லவி குடும்பத்தினர் என எல்லோருமே அந்தந்த கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்கள். ராணுவத்தில் மேஜர் முகுந்தின் உயர் அதிகாரியாக ராகுல் போஸ், முகுந்த் வரதராஜனுக்கு எப்போதும் பக்க பலமாக இருக்கும் விக்ரம் சிங் கதாபாத்திரத்தில் புவன் அரோரா ஆகியோருக்கும் பாராட்டுகள்.
படத்தின் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் என அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். அன்பறிவு மாஸ்டர் சண்டைக்காட்சிகளை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் ஃபிரெஷாக, இதுவரை பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. மின்னலே, ஆஸாதி என பாடல்களும் படத்துக்கு பக்க பலம்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதை ராணுவம் சம்பந்தப்பட்ட படமாக .அட்டுமே அணுகாமல் முகுந்த் கதையின் ஜீவனான காதல், குடும்பம் ஆகியவற்றை திரைக்கதையில் அழகாக கோர்த்து மிகவும் எமோஷனலான ஒரு படத்தை தந்திருக்கிறார். அத்துடன் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் தேசபக்தி குறைந்து வரும்வேளையில் இந்த படம் மிகவும் அவசியமான ஒன்று. ராணுவ வீரர்கள் குடும்பத்தினரின் அன்றாட மனநிலையையும் சில காட்சிகளில் மிகச்சிறப்பாக காட்டியிருக்கிறார். ஒரு பயோபிக் கதையை மிகச்சிறப்பாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், அத்துடம் எதையும் திணிக்காமல் இயல்பான வாழ்க்கையை கொடுத்துள்ளார் இயக்குனர்.
இப்படிப்பட்ட ஒரு பயோபிக் படத்தில் கூட இப்படி ஒரு இடைவேளை காட்சி வைக்க முடியுமா என நம்மை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு ஒரு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது, அத்துடன் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்துக்கும் மரியாதை செய்திருக்கிறது. படம் முடிந்து நாமும், ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டுவதே அதற்கு சான்றாகவும் அமைந்துள்ளது.