அக்கரன் – திரை விமர்சனம்

எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம் குமார், நமோ நாராயணன், பிரியதர்ஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அக்கரன்”. அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. அரண்மனை 4, குரங்கு பெடல் போன்ற பெரும் பின்னணி கொண்ட படங்கள் வெளியாகும் நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய எடுத்திருக்கும் முயற்சியே பாராட்டுக்குரியது. ரிலீஸ் முயற்சியை தாண்டி படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, எம்.எஸ்.பாஸ்கருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வெண்பாவுக்கு திருமண ஏற்பாடு நடந்து, பின் ஒரு அசாதாரண சூழலால் திருமணம் நடக்காமல் போகிறது. இதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்காமல் போகிறது. ஆனால் வெண்பாவும், மாப்பிள்ளை விஸ்வந்தும் எப்படியாவது அப்பாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதற்கிடையில் இரண்டாவது மகள் மருத்துவப் படிப்புக்காக நீட் கோச்சிங் செல்கிறார். அங்கு நடைபெறும் ஒரு சம்பவத்தால் காணாமல் போகிறார். மிகுந்த அதிர்ச்சியுடன் குடும்பத்தார் அவரை தேடுகிறார்கள். அதன் பின் திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை பயணிக்கிறது. காணாமல் போன பெண் என்ன ஆனார்? வெண்பாவும், விஸ்வந்தும் ஒன்று சேர்ந்தார்களா? அவள் காணாமல் போனதன் பின்னணி என்ன? இது தான் மீதிக்கதை.

கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல் சுவாரஸ்யத்துக்காக நான்லீனியர் முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண் பிரசாத். அத்துடன் ரஷோமான் என்ற முறையில் கதையின் முக்கிய கருவை கையாண்டு இருப்பதும் படத்துக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

எம்.எஸ்.பாஸ்கர் தாயில்லாத இரண்டு பெண்களுக்கு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். மகள் காணாமல் போகும்போது தவிப்பதும், தன் மாப்பிள்ளையிடம் கோபத்தை காட்டுவதும், ஒரு மகள் தான் காணாமல் போயிட்டா, நீயாவது இருக்கணும்மா என சொல்லி விட்டு போவதும், வில்லன்களிடன் உரையாடும்போது ஆக்ரோஷத்தை காட்டுவதும் சிறப்பு.

நாயகி வெண்பா அழகு. அப்பா மீது காட்டும் அக்கறை, திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளையிடம் காட்டும் காதல் என கண்ணியமான ஒரு கதாபாத்திரம். தங்கையாக நடித்திருக்கும் பிரியதர்ஷினியும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். கபாலி விஷ்வந்துக்கு நல்ல ஒரு கதாபாத்திரம். ஆனாலும் பாதி படத்தில் காணாமல் போகிறார் என்ற ஒரு குறை தான். ஆகாஷ் பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் இவர்கள் இருவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. பாதி படத்தை நகர்த்தி செல்வதே இவர்களை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை தான். ஆகாஷ் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி நடித்திருக்கிறார். முயற்சி செய்தால் கதாநாயகனாகவும் வலம் வர முடியும். நமோ நாராயணன் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.

கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் நல்ல ஒரு விஷூவலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த். பெர்மிஷன் வாங்காமல் ஷூட் செய்வது போல ஒரு சில நீளமான காட்சிகளையும் காரின் பின் சீட்டில் வைத்து ஷூட் செய்ததை தவிர்த்திருக்கலாம். ஹரியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம் தான். படத்தின் மிக்ஸிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் இரைச்சல் காதை அடைக்கிறது.

இயக்குனர் அருண் பிரசாத் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து முழுக்க பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் கையாண்டிருக்கும் விதமும், திரைக்கதையும் கைகொடுத்திருக்கிறது. ஆனாலும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி ஒரு பார்க்கக் கூடிய சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *