8 தோட்டாக்கள், ஜிவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வெற்றி அடுத்தடுத்து பல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் சீரியல் கில்லர், இன்வெஸ்டிகேஷன் படம் “Chennai files முதல் பக்கம்”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மிக பிரபலமான கிரைம் நாவல் எழுத்தாளரின் மகன் வெற்றி. தந்தையை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக சென்னைக்கு வந்து தந்தை பற்றி நிருபர் ஷில்பா மஞ்சுநாத்திடம் சொல்ல அந்தத் தொடரை எழுதுகிறார். தந்தையை போலவே வெற்றியும் நல்ல புத்திசாலி, கிரைம் விஷயங்களை மிகச் சிறப்பாக கண்டறிபவர். ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு ஒரு வழக்கில் உதவி செய்ய, அதைத் தொடர்ந்து ஒரு சீரியல் கொலை வழக்கை விசாரிக்க உதவி செய்கிறார். அந்த தொடர் கொலைகளை செய்வது யார்? என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.
எட்டு தோட்டாக்கள் படத்தில் இருந்தே புத்திசாலித்தனமான கதைகளில் கவனம் செலுத்தும் வெற்றி இந்த கதையையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். தன் வழக்கமான உடல்மொழி, வசன உச்சரிப்பு என வழக்கம் போலவே செய்திருக்கிறார். ஒரு சில சண்டைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார். நாயகியாக ஷில்பா மஞ்சுநாத். ரிப்போர்டராக மிக நன்றாகவே நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக தம்பி ராமையா. சீரியஸ் போலீஸாக இல்லாமல் வழக்கமான காமெடி பாணி கதாபாத்திரம். அது அப்படியே கொஞ்சம் எமோஷனல் பாத்திரமாக மாறும் இடம் படத்தின் ஆணி வேர். ரெடின் கிங்க்ஸ்லீ ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். தம்பி ராமையா மகளாக நடித்தவர் மிக நன்றாகவே நடித்திருக்கிறார். மகேஷ் தாஸ் வில்லனாக மிரட்டுகிறார். அவர் தான் தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவலாக வந்து விழுகிறது.
அரவிந்த் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. திரில்லர் படம் என்றாலும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஒரு சில இரவு காட்சிகளை அந்த திரில்லர் மூடை அழகாக காட்டியிருக்கிறது. ஏஜிஆரின் இசை ஓகே ரகம்.
இயக்குனர் அனீஷ் அஸ்ரப். ஒரு சீரியல் கில்லர் திரில்லர் படத்தை கொஞ்சம் கமெர்சியல் மீட்டரில் கொடுத்திருக்கிறார். சீரியல் கில்லர் கதையுடன் இன்னொரு மிக முக்கியமான விஷயத்தை கதையில் இணைத்து கொடுத்திருக்கிறார். அதை கனெக்ட் செய்த விதமும் சிறப்பு. சென்னை ஃபைல்ஸ் என்ற கிரைம் நாவலில் இது முதல் பக்கம் என்பதைப் போல, சென்னை ஃபைல்ஸ் என்ற திரைப்பட தொகுப்பில் இது முதல் அத்தியாயம். அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் வரும் என நம்பலாம். நிச்சயம் படத்தை பார்த்து ரசிக்கலாம்.