அசுரன் படத்தின் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த டீஜே நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘உசுரே’. பிக் பாஸ் ஜனனி நாயகியாக நடித்திருக்கிறார். 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மந்த்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மூன்று பேருக்கும் முக்கியமான படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் டீஜே. அவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறுகிறார்கள் நாயகி ஜனனியும், அவரது அம்மா மந்தராவும். நாயகி ஜனனியை டீஜே காதலிக்க, முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கிறார் ஜனனி. ஒரு கட்டத்தில் அவருக்கும் காதல் மலர, இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா தடை போடுகிறார். அவர் தடையை மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
‘அசுரன்’படத்தில் ரசிகர்கள் மனதில் பதிந்த டீஜே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல ஒரு இளம் ஹீரோ. காதலில் உருகும் காட்சிகள், கோபத்தில் கொந்தளிக்கும் காட்சிகள் என அசுரன் போலவே இதிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். பிக் பாஸ் ஜனனி கொள்ளை அழகு. நாயகியாக கொஞ்சலாம் என தோன்றும் அழகு. அதிகம் பேசாமல் தன் ரியாக்ஷன்களில் மட்டுமே நடித்திருக்கிறார். படத்துக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார்.
ஒரு காலத்தில் 90’ஸ் கிட்ஸை மயக்கிய மந்த்ரா, இந்த படத்தில் ஜனனியின் அம்மாவாக மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன் தோற்றத்தை மெயிண்டைன் செய்திருப்பது பாராட்டுக்குரியது. தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். கிரேன் மனோகர், செந்திகுமாரி, தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படமாக்கிய விதமும் அழகு. பின்னணி இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. மார்க்கி சாய் ஒளிப்பதிவில் அந்த கிராமத்தின் அழகை ரசிக்கலாம். படமாக்கிய கிராமம், அணைக்கட்டு, அந்த மலை என அத்தனையும் அழகு.
நவீன் டி.கோபால் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு காதல் கதையை காதல், எமோஷன், வலி என கலந்து கொடுத்திருக்கிறார். காதல் கதைக்குள்ளும் சில எதிர்பாரா திருப்பங்களை தந்து நம்ம அசர வைக்கிறார். காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. டீஜே, ஜனனி காதல் ஜோடி மிகப் பொருத்தம். இரண்டாம் பாதியில் நம் மனதை கொஞ்சம் கனக்க வைக்கிறார். மொத்ததில் அழகான ஒரு ஒரு தெளிந்த நீரோடை போன்ற ஒரு காதல் கதையை தந்திருக்கிறார். நிச்சயம் ஜனனி, டீஜேக்கு நல்ல ஒரு அறிமுகம். நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.