இந்தியாவின் இரு பெரும் காவியங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராமாயணா. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவ்வப்போது புதுப்புது வடிவங்களில், புதுப்புது வெர்சன்களாக வெளியாகி அந்தந்த தலைமுறை ரசிகர்களை சென்றடைந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரபாஸ் நடிக்க உருவாகி வெளியானது. அடுத்த ஆண்டு ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்க ஒரு ராமாயணா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் 1993-ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவான ‘ராமாயணா – தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” என்ற அனிமேஷம் திரைப்படம் புதுப்பொலிவுடன் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்த அதே கதை தான். இருந்தாலும் சொல்கிறேன். தசரதனின் மூத்த மகன் ராமர், அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த நிலையில் சூழ்ச்சியின் காரணமாக 14 வருடங்கள் வனவாசம் அனுப்பப்படுகிறார். அவருடனே அவரது மனைவி சீதா, தம்பி லக்ஷமணன் ஆகியோரும் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கிருந்த சீதா தேவியை ராவணன் சூழ்ச்சி செய்து இலங்கைக்கு கடத்திச்சென்று விடுகிறார். சீதை எங்கே இருக்கிறார் எனக் கண்டுபிடித்து அவரை மீட்க செல்லும் ராமன், வானரப் படைகளின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி சீதையை மீட்பது தான் படத்தின் கதை.
என்ன தான் லைவ் ஆக்ஷன் படமாக பார்த்தாலும், டிவி தொடர்களாக பார்த்தாலும் அனிமேஷனில் பார்ப்பதும் ஒரு வித அலாதியான அனுபவம் தான். அனிமேஷனை பொறுத்தவரை மிகச்சிறப்பாக, மிகத் தத்ரூபமாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட படம் தானா என்ற ஆச்சர்யம் உருவாவதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரம் வடிவமைப்பும் மிச்சிறப்பாகவும், தரமாகவும் உள்ளது.
கும்பகர்ணன், ஹனுமான் ஆகியோரின் பிரமாண்ட தோற்றங்களும், லங்கை தேசமும், அயோத்தி தேசமும், வனவாசம் செல்லும் வனப்பகுதிகள் என அத்தனையையும் திரையில் அனிமேஷனில் நிச்சயம் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்கள். கதை சொல்லலும், எந்தெந்த விஷயங்களை படத்தில் புகுத்த வேண்டும் எனவும் அவர்கள் எடுத்த முடிவு மிகச்சரியான, தெளிவான கதை சொல்லலுக்கு உதவியிருக்கிறது.
தமிழ் டப்பிங்கில் ராமர், சீதா கதாபாத்திரங்களுக்கு செந்தில்குமார், டி.மகேஷ்வரி ஆகியோரது குரலும், ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் ஆகியோரும் படத்துக்கு தங்கள் குரலால் உயிர் கொடுத்துள்ளனர். பாடல்களை தமிழ்ப்படுத்தாமல் அப்படியே உபயோகித்திருப்பது சிறந்த முடிவு.
ராமாயணத்தை இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் எடுத்து செல்ல இது ஒரு சிறந்த முயற்சி. தமிழ் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் தமிழில் பார்த்து ரசிக்கலாம்.