தமிழ் சினிமாவிற்குள் ஒரு புது தலைமுறை உள்ளே வருவதற்கும், புது அலை சினிமாக்கள் உருவானதற்கும், புது சிந்தனையோடு பல இயக்குனர்கள் அறிமுகம் ஆனதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்தவர் சிவி குமார். அப்படி தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனர் தான் நலன் குமாரசாமி. அவர் இயக்கி, ஒரு கல்ட் ஸ்டேட்டஸை பெற்ற படம் “சூது கவ்வும்”. 2013-ல் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் சிவி குமார் தயாரித்திருக்கிறார். உண்மையிலேயே இந்த கதை இந்த நேரத்திற்கு தேவைப்படும் ஒன்றா? அல்லது முதல் பாகத்தின் பெயரை வைத்து காசு பார்க்க செய்யப்பட்ட படமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சூது கவ்வும் படத்தின் யுனிவர்ஸில் நடக்கும் கதை தான் இந்த பார்ட் 2. விஜய் சேதுபதியின் கதைக்கு முன்பே அவரை போலவே கொள்கையோடு கொள்ளை, கடத்தலில் ஈடுபடும் நபராக இருக்கிறார் மிர்ச்சி சிவா. மிக நேர்மையாக போலீஸிடம் கைதாகி பல வருடங்கள் சிறைக்கு செல்கிறார். அவர் சிறையில் இருக்கும் காலகட்டத்தில் தான் விஜய் சேதுபதி வெளியில் அதே தொழிலை செய்து வந்தது போல காட்டப்படுகிறது. சிறையில் இருந்து வெளியில் வந்த மிர்ச்சி சிவா என்ன செய்கிறார் என்பதை இந்த பாகத்தில் காணலாம். முதல் பாகத்தின் இறுதியில் அரசியல்வாதியாக உருவெடுக்கும், நிதி அமைச்சராகிறார். ஊழல் மட்டுமே செய்து தன் பதவியையும், கட்சியில் தன் இடத்தையும், முதல்வரிடத்தில் முக்கிய இடத்திலும் இருக்கிறார். பணத்தை வைத்து தேர்தலில் எதையும் சாதித்து விடலாம் என நினைக்கும் கருணாகரன் மற்றும் கட்சியினருக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையில் சிவா எப்படி இடை வருகிறார்? அந்த சிக்கலில் இருந்து கருணாகரன் மீண்டும் அரசியலில் தன் இடத்தை தக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் மிர்ச்சி சிவா. அவர் வந்தாலே சிரிக்கும் அளவுக்கானது அவரின் பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி. அப்படிப்பட்டவர் விஜய் சேதுபதியின் அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பங்கை சிறப்பாக செய்தாலும் அதற்கேற்ப காட்சிகளும், திரைக்கதையும் இல்லாதது கொஞ்சம் சோகம். அவரின் கேங்கில் இருக்கும் கல்கி, நாயகி உட்பட மற்றவர்கள் செய்யும் காமெடியும் ரசிக்கும் விதத்தில் இல்லை. சில இடங்களில் நம் பொறுமையை சோதிக்கிறது.
கருணாகரன், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதியாக முதல் பாகம் போலவே இதிலும் ஸ்கோர் செய்கிறார். அவரின் தந்தையும் நேரமையான அரசியல்வாதியுமான எம்.எஸ்.பாஸ்கர் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அருள் தாஸ், ராதாரவி, வாகை சந்திரசேகர், யோக் ஜேபி, கார்த்திக் உட்பட மற்றவர்களும் அவர்கள் பங்கை செய்திருக்கிறார்கள்.
கார்த்திக் தில்லை ஒளிப்பதிவும் சுமாராகவே இருக்கிறது. ரொம்பவே பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக காட்டுகிறது. எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. முதல் பாகத்துக்கு இசை எவ்வளவு பக்கபலமாக இருந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
முதல் பாகத்தின் Skeleton-ஐ எடுத்துக் கொண்டு அப்படியே அதன்மேல் பின்னப்பட்ட திரைக்கதையில் பெரிதாக சுவாரஸ்யமில்லை. இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு வேலையை செய்திருக்கிறார். அதற்கு பாராட்டுக்கள். ஆனால் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக வடிவமைத்திருந்தால் முதல் பாகம் போலவே பேசப்படும் படமாக இருந்திருக்கும். கதாபாத்திரங்களும் வலுவாக இல்லை, திரைக்கதையும் ஆர்வத்தை கூட்டும் விதத்தில் இல்லை என்பது மைனஸ். மொத்தத்தில் நாம் சொல்லிக் கொள்வது சிறந்த படங்களை பார்ட் 2, ரீமேக் எடுத்து அதன் ஜீவனை குலைக்காமல் அப்படியே விட்டு விட வேண்டும் என்பது தான்.