விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் பரத்தும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களும் மலையாளிகளும் ஒருதாய் மக்கள் என்ற மிக முக்கியமான செய்தி இந்த படத்தை தனித்துவமாக்குகிறது.
ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டினியால் வாடும் தொழிலாளர்களையும் ஒடுக்கி சுரண்டும் சமூக அமைப்புக்கு எதிரான போராட்டங்களும், மனதை தொடும் காதல் கதைகளும் அடங்கிய வீரவணக்கம் திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் ஒரு வித்தியாசமான அத்தியாயத்தை எழுதப்போகிறது.
சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வீர வணக்கம் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பட ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
கலாச்சார மற்றும் ஊடக துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒருமனதாக இந்த படத்தை பாராட்டியது வீரவணக்கத்தின் வெற்றியை குறிக்கிறது.
சமுத்திரக்கனி, பரத் தவிர ரித்தேஷ், தேசிய விருது பெற்ற சுரபிலட்சுமி, பிரபல புரட்சி பாடகியும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான பி. கே. மேதினி, பரணி, ஐஸ்விகா, சித்திக், ஆதர்ஷ் தேவன், சித்தாங்கனா, பிரேம்குமார், சாரி என்கிற சாதனா, ரமேஷ் பிஷாரடி, அரிஸ்டோ சுரேஷ், பீமன் ரகு, உல்லாஸ் பந்தளம், பிரமோத் வெளியநாடு, கோப்ரா ராஜேஷ் ரியாஸ் நெடுமங்காடு, சுதீஷ், வி. கே. பைஜு, கோபிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற பி. அஜித் குமார் இப்படத்தை எடிட் செய்துள்ளார்.
பல விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் கவியரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விசாரத் கிரியேஷன்ஸ் ( Visarad creations) யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட மூன்று பாடல்களையும் ஒரு சில நாட்களில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். வரும் நாட்களில் படத்தின் ட்ரெய்லர், டீசர் மற்றும் மேலும் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.